உதயநிதி வழக்கு - தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!!!

27th of September 2014
சென்னை:திமுக பொருளாளர்  மு.க.ஸ்டாலினின் மகனான, உதயநிதி 'ரெட் ஜெயண்ட் மூவிஸ்' என்ற  நிறுவனம் மூலம், தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை தயாரித்தும், விநியோகம் செய்தும் வருகிறார். மேலும், கதாநாயகனாகவும் பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், தான் தயாரிக்கும் படங்களுக்கு அரசியல் பாரபட்சத்தோடு கேளிக்கை வரி விளக்கு அளிக்க அரசு மறுப்பதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் உதயநிதி வழக்கு தொடர்ந்திருந்தார். இது குறித்து அவர் தாக்கல் செய்த மனுவில், "உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்த “ஏழாம் அறிவு” திரைப்படத்துக்கு வேண்டுமென்றே அரசியல் உள்நோக்கத்தோடு காலதாமதமாக கேளிக்கைவரிவிலக்கு வழங்கி, வரிவிலக்கின் பயன் அவர்களுக்கு  கிடைக்க விடாமல்  செயல்பட்டதாலும்,


அந்தப் படத்துக்குப்  பின்னர் விண்ணப்பித்த பல படங்களுக்கு உடனடியாக வரிவிலக்கு வழங்கி பாரபட்சமாக நடந்து கொண்டதாலும், கேளிக்கைவரிவிலக்கு வழங்க பரிந்துரை செய்யும்  குழுவில் இடம்பெறும் உறுப்பினர்களுக்கு இருக்கவேண்டிய தகுதிகள் பற்றி  அரசாணைகளில் குறிப்பிடப்படாததாலும், கேளிக்கை வரி விலக்கு அளிக்க தமிழக அரசின்  வணிக வரித்துறையால்  கொண்டுவரப்பட்ட அரசாணைகளை ரத்துசெய்ய உத்தரவிட வேண்டும்." என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஒரு  படத்துக்கு எவ்வளவு நாட்களில் கேளிக்கை வரிவிலக்கு வழங்கி ஆணையிட வேண்டும் என்று விதிகள் எதுவும் இல்லாத நிலையில், காலநிர்ணயம் செய்து சட்டத்திருத்தம் செய்ய உத்தரவிட முடியாது     என்றும்,   கேளிக்கைவரி விலக்கு வழங்கும் குழுவில் இடம்பெற்ற உறுப்பினர்கள் திரைப்படத்துறையின் பல்வேறு துறைகளில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளதால் அவர்கள் தங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி  பாரபட்சமாக நடந்து கொள்வார்கள் என்று கூற இயலாது என்றும் கூறி ரெட் ஜெயன்ட் மூவிஸ் தாக்கல் செய்த  மனு உயர்நீதி மன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. 

உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது  இது விசாரிக்கப்படவேண்டிய வழக்கு என்று கூறி கணம் உச்சநீதிமன்றம் விசாரணைக்கு அனுமதித்து, எதிர்மனுதார்கள் 6 வாரத்திற்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக  அரசுக்கு நோட்டிஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

தமிழில் பெயர் வைத்த படங்களுக்கு மட்டுமே கேளிக்கை வரிவிலக்கு வழங்க வேண்டும் என்று  அரசாணை கூறியுள்ளபோதிலும், அதற்கு எதிராக பாரபட்சமாக செயல்பட்டு  “சைக்கிள் கம்பெனி”, “ரம்மி” போன்ற பிற மொழிகளில் பெயரிடப்பட்ட படங்களுக்கும் விதிமுறைகளை மீறி வரிவிலக்கு வழங்குமாறு பரிந்துரை செய்ததால்  கேளிக்கை வரி விலக்கு குழு உறுப்பினர்கள்  1. திரு.பாபு, 2. திரு வி.எஸ். ராகவன், 3.திருமதி ராஜஸ்ரீ, 4. திருமதி எல்.ஆர். ஈஸ்வரி 5. திரு. சங்கர் கணேஷ், 6. திரு. ஏ.எல். ராகவன், 7. திருமதி. எம். என். ராஜம் ஆகியோரை பதவி நீக்கம் செய்யுமாறு ரெட் ஜெயன்ட் மூவிஸ்  நிறுவனம் சார்பில் உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments