தீபாவளி வெளியீட்டில் இருந்து பின் வாங்குகிறதா 'ஐ'?!!!

29th of September 2014
சென்னை:தெலுங்கு மற்றும் இந்தி பதிப்பின் இசை வெளியீட்டை முன்வைத்து 'ஐ' படத்தின் வெளியீடு தீபாவளியில் இருந்து நவம்பர் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது.

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், ஏமி ஜாக்சன் நடிப்பில் தயாராகி இருக்கும் படம் 'ஐ'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருக்கும் இப்படத்தினை தயாரித்திருக்கிறார் ஆஸ்கர் ரவிச்சந்திரன். தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
 
இந்நிலையில், தெலுங்கு பதிப்பின் இசை வெளியீடு அக்டோபர் 2-ஆம் வாரத்தில் நடைபெற இருக்கிறது. இதில் ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான், முதல்வர் சந்திரசேகர ராவ் மற்றும் நடிகர் சிரஞ்சீவி ஆகியோர் தலைமையில் நடைபெற இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பாக 'ஐ' தெலுங்கு பதிப்பினை வாங்கியிருக்கும் பிரசாத், "ஜாக்கிசான் வருகை குறித்து இன்னும் 2 நாட்களில் முடிவு தெரிந்து விடும். பிரம்மாண்டமான விழாவாக விரைவில் நடைபெற இருக்கிறது. பாதுகாப்பு காரணங்களால் மேலும் எதுவும் தெரிவிக்க முடியாது" என்று கூறியிருக்கிறார்.
மேலும், 'ஐ' இந்தி பதிப்பு இசை வெளியீட்டு விழாவிற்கு சில்வஸ்டர் ஸ்டலோன் வரவிருக்கிறார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
 
அக்டோபர் 22ம் தேதி தீபாவளி வரவிருக்கும் பட்சத்தில், அம்மாதத்தின் இரண்டாம் வாரத்தில் தெலுங்கு இசை வெளியீடு, அதனைத் தொடர்ந்து இந்தி இசை வெளியீடு என்று இருக்கும் போது தீபாவளிக்கு 'ஐ' வெளிவர வாய்ப்பில்லை என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. மேலும், திரையரங்க விநியோகஸ்தர்கள் உள்ளிட்டவர்களிடம் தீபாவளி படங்களுக்கு இரண்டு வாரங்கள் கழித்து, நவம்பர் 14ம் தேதி 'ஐ' வெளியாகும் என்று கூறப்பட்டு இருக்கிறது.
 
இது தொடர்பாக 'ஐ' தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரனைத் தொடர்பு கொண்ட போது, "இன்னும் இரண்டு நாட்களில் அனைத்தும் முடிவாகி விடும். பெரிய பட்ஜெட் படம் என்பதால், பல்வேறு செய்திகள் வெளியாகிக் கொண்டே தான் இருக்கும். அனைத்திற்கும் பதில், இன்னும் இரண்டு நாட்களில் தெரியும்" என்று கூறினார்.

Comments