சினிமா பாலிடிக்ஸ் பற்றி என்னிடம் கேட்டு தெரிந்துகொள்” – ஜெயராம் மகனுக்கு கமல் அறிவுரை!!!

2nd of September 2014
சென்னை:மலையாளத்தில் முன்னணி நடிகர் தான் ஜெயராம்.. ஆனாலும் தனது மகன் காளிதாஸை தமிழில் தான் கதாநாயகனாக அறிமுகப்படுத்துவேன் என விடாப்படியாக நின்று அதை சாதித்தும் காட்டிவிட்டார். ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தின் மூலம் பரபரப்பை ஏற்படுத்திய பாலாஜி தரணிதரன் அடுத்ததாக இயக்கும் ‘ஒரு பக்க கதை’ படத்தில் காளிதாஸ் தான் ஹீரோ..!

இந்தப்படத்தின் துவக்க விழா சென்னையில் நடைபெற்றது. காளிதாஸை தனது நண்பர் கமல் தான் அறிமுகப்படுத்தி வைக்கவேண்டும் என ஜெயராம் ஆசைப்பட்டதை நிறைவேற்றி வைக்கும் விதமாக, தூத்துக்குடி அருகில் நடைபெற்று வரும் ‘பாபநாசம்’ படப்பிடிப்புக்கு ஒரு நாள் லீவு போட்டுவிட்டு வந்து ஜெயராமுடனான தனது நட்பை கௌரவப்படுத்தினார் கமல்.
 
காளிதாஸை அறிமுகப்படுத்தி வைத்து பேசிய கமல், “ஒரு பெயரில் ஏற்கனவே ஒரு நடிகர் பிரபலமாக இருக்கும்போது அதே பெயரில் இன்னொருவர் வந்தால் பீல்டில் நுழைவதோ பெயர் பெறுவதோ சிரமம். ஆனால் காளிதாஸ் என்கிற பெயர் இதுவரை யாரும் வைக்காத பெயர். அதுவே உனக்கு பலம்..
 
உனக்கு நடிப்பு பற்றி ஏதாவது சந்தேகம் வந்தால் உன் தந்தையிடம் கேட்டு தெரிந்துகொள்.. சினிமாவில் உள்ள பாலிடிக்ஸ் எதுவும் புரியவில்லை என்றால் அதை அவரிடம் கேட்காதே.. அவர் பாலிடிக்ஸ் பண்ணாத ஆள்… நேராக என்னிடம் வா..
 
நானும் பாலிடிக்ஸ் பண்ணுபவன் அல்ல.. ஆனால் பாலிடிக்ஸில் சிக்கிய அனுபவங்கள் எனக்கு நிறைய உண்டு.. அதை வைத்து அதிலிருந்து எப்படி தப்பிப்பது என சொல்லித்தருகிறேன்” என அறிவுரை கூறும் விதமாக வாழ்த்திப் பேசினார்.

Comments