கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா மற்றும் பலர் நடிக்கும் லிங்கா'விலும் அதிகமான கிராபிக்ஸ் வேலைகள்!!!

5th of September 2014
சென்னை:கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா மற்றும் பலர் நடிக்கும் 'லிங்கா' படப்பிடிப்பு தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒரு அணையைக் கட்டுவதற்காக ரஜினிகாந்த் எவ்வளவு கஷ்டப்படுகிறார் என்பதுதான் படத்தின் கதை. முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பென்னி குயிக்கை மையமாக வைத்து கற்பனை கலந்து 'லிங்கா' கதை உருவாக்கப்பட்டுள்ளதாக ஏற்கெனவே செய்திகள் வெளியாகின.

தமிழ்நாட்டு அணைகள் பக்கம் தண்ணீரே இல்லாததால்தான் கர்நாடகாவில் உள்ள அணைகள் பக்கமாக படத்தின் படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள். இருந்தாலும் அணைகள் கட்டுவது என்பது சாதாரண வேலை கிடையாது.
 
சினிமாவிற்காக என்னதான் 'செட்' போட்டாலும் அணை கட்டுவதையெல்லாம் செட்டாக போட பல கோடிகள் செலவாகும். எனவே அணை கட்டுவது போன்ற காட்சிகளையும், அணை தகர்ந்து போவது, உடைந்து போவது போன்ற காட்சிகளையும் கிராபிக்ஸ் மூலம் செய்யவிருக்கிறார்கள். இதற்கான பணிகள் ஏற்கெனவே ஆரம்பமாகிவிட்டதாம்.
 
'கோச்சடையான்' படத்தில் இடம் பெற்ற கிராபிக்ஸ் காட்சிகளுக்கு பலவித எதிர்மறையான கமெண்ட்டுகள் வந்ததால் 'லிங்கா' படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளை மிகவும் கவனத்துடன் உருவாக்கி வருகிறார்களாம். படத்தில் ரஜினிகாந்த் இரு வேடங்களில் நடித்து அசத்தினாலும், கிராபிக்ஸ் காட்சிகளும் படத்தின் ஹைலைட்டாக இருக்குமாம்.
 
தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கில் ரஜினிகாந்த் பிறந்த நாளான டிசம்பர் 12ம் தேதியன்று 'லிங்கா' வெளியாக உள்ளது.

Comments