2nd of September 2014
சென்னை:சுதந்திர போராட்ட தலைவரான பாலகங்காதர திலகரின் பெயரில் ‘திலகர்’ என்கிற படம் தயாராகியுள்ளது. பெருமாள் பிள்ளை இயக்கியுள்ள இந்தப்படத்திற்கு ‘தமிழ்படம்’ கண்ணன் இசையமைத்துள்ளார். அறிமுக கதாநாயகனாக துருவா மற்றும் முக்கிய வேடத்தில் கிஷோர் நடிக்க, கதாநாயகியாக மிருதுளா பாஸ்கர் நடித்திருக்கிறார். இந்தப்படத்தை கலைப்புலி தாணு வெளியிடுகிறார்.
இன்று காலை ‘திலகர்’ படத்தின் இசைவெளியீட்டு விழா சாந்தம் தியேட்டரில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக அமீர், சமுத்திரகனி, கரு.பழனியப்பன், சீனு ராமசாமி, ஸ்ரீகாந்த், நமீதா, இனியா, நீது சந்திர உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர்.
மேடையில் கிட்டத்தட்ட 25க்கும் அதிகமானவர்கள் அமரவைக்கப்பட்டனர். இதில் ஆரம்பத்தில் பேசிய ஒரு சிலர் நீண்டநேரம் தங்கள் பேச்சை ஜவ்வாக இழுத்து, போரடிக்க ஆரம்பித்தனர். இதனால் தொகுப்பாளினி ரம்யா அடுத்து வருபவர்களை ரத்தினச்சுருக்கமாக பேசுமாறு கேட்டுக்கொண்டார்.
இயக்குனர் கரு.பழனியப்பன் பேசும்போது “இன்னைக்கு அமீர் அண்ணன் சீக்கிரமே விழாவிற்கு வந்தது ஆச்சர்யமாக இருக்கிறது.. ஏன்னா பெரும்பாலும் அவர் லேட்டா தான் வருவார்..” என தனது வியப்பை வெளிப்படுத்தினார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக பேசிய அமீர், “இன்றைய தேதியில் இசை வெளியீட்டு விழா என்பது படத்திற்கான பப்ளிசிட்டிக்காகத்தான் நடத்தப்படுகிறது. ஆனால் மேடையில் சிறப்பு விருந்தினர்களுடன் சேர்த்து படக்குழுவினர் உட்பட அனைவரையும் அமரவைக்கிறார்கள்.
முதலில் பேசுபவர்கள் அதிக நேரம் எடுத்துக்கொள்வதால் கடைசியாக பேச வருபவர்களுக்கு அடுத்த ஷோவிற்கு நேரமாச்சு.. தியேட்டரை ஒப்படைக்க வேண்டும்.. அதனால் சீக்கிரம் முடித்துக்கொள்ளுங்கள் என சொல்லப்படுகிறது..
அப்படி ‘நன்றி..வணக்கம்’ என இரண்டு வார்த்தைகளை மட்டும் பேசிவிட்டு செல்வதற்காக, நான் ஏன் எட்டு மணிக்கே வந்து நிற்கவேண்டும்..? விழா நடத்துபவர்கள் பப்ளிசிட்டிக்கு எது முக்கியம் என்பதை கவனத்தில் கொண்டு விழாக்களை நடத்தினால் நன்றாக இருக்கும்” என மேடை கிடைத்தால் போதும் என ரம்பத்தை போடும் சில ‘ரப்பர்’ பார்ட்டிகளுக்கு நேரடியாகவே சூடு வைத்தார்..
Comments
Post a Comment