வரும் 20ம் தேதி நாகார்ஜுனா - அமலா மகன் அகில் நாயகனாக அறிமுகம்!!!

1st of September 2014சென்னை:1980களில் தமிழில் முன்னணி நாயகியாக வலம் வந்த அமலா, பின்னர் தெலுங்குப் படங்களில் நாயகியாக நடித்த போது அங்குள்ள முன்னணி நடிகரான நாகார்ஜுனாவைக் காதல் திருமணம் செய்து கொண்டு நடிப்பிலிருந்து விலகினார். அவர்களுக்கு அகில் என்ற ஒரு மகன் இருக்கிறார். இவர் குழந்தையாக இருந்த போதே தமிழில் டப்பிங் ஆகி வெளிவந்த 'சுட்டிக் குழந்தை' என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது டீன் ஏஜ் வயதைக் கடந்துள்ள அகில், சமீபத்தில் 100 நாட்களைக் கடந்த 'மனம்' படத்தில் ஒரு சிறிய சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார்.  
அதுவே அவருக்கு பலத்த வரவேற்பை ஏற்படுத்திக் கொடுத்தது. அகிலும் விரைவில் நாயகனாக அறிமுகமாக உள்ளார் என்று கடந்த சில மாதங்களாகவே செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன. அதற்கான கதைகளை அகிலும், அவருடைய அப்பா நாகார்ஜுனாவும் கேட்டு வந்தார்கள்.
 
நல்ல கதையில் அறிமுகமாக வேண்டும் என்று இருந்த அவர்களுக்கு பிரபல இயக்குனரான வி.வி.விநாயக் சொன்ன கதை மிகவும் பிடித்துப் போய்விட்டதாம். அதனால், அவர் சொன்ன கதையை படமாக்கலாம் என முடிவு செய்துள்ளார்களாம். வரும் 20ம் தேதி நாகார்ஜுனாவின் அப்பாவான அக்கினேனி நாகேஸ்வரராவின் பிறந்தநாள் வரவுள்ளது. அன்று அகில் நடிக்க உள்ள அறிமுகப் படத்தின் துவக்க விழா நடைபெறும் என்று டோலிவுட்டிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
 
 ஏற்கெனவே நாகார்ஜுனாவின் மூத்த மகன் நாக சைதன்யா அங்கு முன்னணி நடிகராக உள்ளார். தற்போது அகிலும் நாயகனாக அறிமுகமானால் தாத்தா, மகன், பேரன்கள் என மூன்று தலைமுறையாக தெலுங்குத் திரையுலகில் இருக்கும் குடும்பம் என்ற பெயர் 'அக்கினேனி' குடும்பத்திற்குக் கிடைக்கும்.

Comments