கத்தி படத்தை எதிர்த்து வழக்கு: 16-க்கு தள்ளிவைப்பு!!!

2nd of September 2014
சென்னை:கத்தி படத்திற்கு தடை விதிக்க கோரி கதை எழுத்தாளர் கோபி தொடர்ந்த வழக்கு விசாரணையை சென்னை சிட்டி சிவில் கோர்ட்டு இம்மாதம் 16_ந் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.
பொன்னேரி தாலுகா காட்டூரைச் சேர்ந்த கோபி என்கிற நைனார் என்பவர், இயக்குனர் முருகதாஸ் தயாரித்து வரும் கத்தி படத்திற்கு தடை விதிக்க கேட்டு சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-


நான் ஒரு தமிழ் எழுத்தாளர், மனித இனத்திற்கு எதிரான தாக்குதல் சம்பவம் தொடர்பாக பல்வேறு கதைகளை எழுதியுள்ளேன். சினிமா தயாரிப்பாளர் விஸ்வாஸ் சுந்தரை சந்தித்து மூத்தக்குடி என்ற பெயரில் கதை சொன்னேன். பன்னாட்டு நிறுவனங்கள், கிராமங்களில் விவசாயி நிலங்களை ஆக்கரமிப்பு செய்வது தொடர்பான கரு கொண்ட கதையாகும்.

இந்த கதையை அவரிடம் சொன்னபோது, ஜெகன் என்பவர் உடனிருந்தார். பின்னர் விஸ்வாஸ் சுந்தர் தற்போது படம் தயாரிக்கும் சூழ்நிலையில் இல்லை என்று என்னிடம் தெரிவித்தார். அப்போது ஜெகன் இந்த கதையை இயக்குனர் முருகதாசிடம் சொல்லி படமாகத் தயாரிக்கலாம் என்று யோசனை தெரிவித்தார். முருகதாசை சந்திக்க அவர் ஏற்பாடும் செய்து கொடுத்தார். முருகதாசை சந்தித்து பல சமயங்களில் இந்த கதை பற்றி சொல்லியுள்ளேன். அப்போது அவர் இரட்டை கதாபாத்திரம் கொண்டதாக கதையை மெருகேற்றும்படி என்னிடம் கேட்டுக் கொண்டார்.

இப்போது முருகதாஸ் எனது கதையை தழுவி கத்தி என்ற பெயரில் படம் எடுத்து வருகிறார். இதுபற்றி அவரிடம் விளக்கம் கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினேன். அதற்கு பதில் அளித்த அவர், எனது குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்துள்ளார். ஆனால் அவரை நான் சந்தித்து கதை சொன்னதற்கான உரையாடல் ஆதாரம் சி.டி.யாக என்னிடம் உள்ளது. எனவே, எனது கதையை தழுவி இயக்குனர் முருகதாஸ் படம் தயாரிக்க தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கில் முருகதாஸ் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த பதில் மனுவில், கோபி என்பவர் யார் என்றே தனக்கு தெரியாது. அவர் கூறும் குற்றச்சாட்டுகள் அனைத்து பொய்யானது. இதுவரை அவரை சந்தித்து கதை குறித்து விவாதம் நடத்தவில்லை. சினிமாத்துறையில் தனக்கென்று ஒரு பெயர் உள்ளது.

நடிகர் விஜயை வைத்து பல கோடி ரூபாய் செலவில் படம் தயாரித்து வருகிறேன். சினிமாத்துறையில் தனக்குள்ள பெயரை கெடுக்கும் வகையில் மனுதாரர் குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று  அதில் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு சென்னை 13_வது உதவி சிட்டி சிவில் கோட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனு மீதான இந்த வழக்கு விசாரணையை வரும் 16_ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

Comments