தமிழ் சினிமாவில் நடிகை, பாடகி என்பதை தாண்டி மற்ற துறைகளில் பெண்களால் பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை: ஸ்பெஷல் ஸ்டோரி!!!

13th of August 2014
சென்னை:தமிழ் சினிமாவில் நடிகை, பாடகி என்பதை தாண்டி மற்ற துறைகளில் பெண்களால் பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை. பெண் இயக்குனர்கள் நிறைய பேர் வந்தாலும், அவர்களும் ஓரிரு படங்களுக்கு பிறகு காணாமல் போய் விடுகிறார்கள். சினிமா இயக்குவது என்பது பல நூறு பேரை வேலை வாங்க கூடிய மேனேஜிங் கெப்பாசிட்டி இருக்க வேண்டிய துறை. நேரம் காலம் பார்க்காமல்,
 
இரவு பகல் வேலை செய்ய வேண்டும். இப்படி சில சிக்கல்கள் இருப்பதால் இயக்குனராக பெண்களால் பெரிய அளவில் ஜெயிக்க முடியவில்லை. ஒரு ரிக்கார்டிங் அறையில் உட்கார்ந்து கொண்டு பாடல்களையும், பின்னணி இசை கோர்ப்பையும் செய்ய முடிகிற இசை அமைப்பாளர்களாகவும் அவர்கள் பெரிய அளவில் ஜெயிக்க முடியவில்லையே.
சுசீலா, ஜானகி பாடகிகளாக மிகப்பெரிய வெற்றி பெற்ற பி.சுசீலா, ஜானகி, சித்ரா போன்றவர்கள்கூட ஒரு படத்துக்கு இசை அமைக்கும் ஞானம் இருந்தும் அவர்கள் அதைச் செய்யவில்லை. பெரும்பாலான பாடகிகள் சொந்தமாக ரிக்கார்டிங் ஸ்டூடியோக்கள்கூட வைத்திருக்கிறார்கள் என்பது கவனிக்க தக்க அம்சம்.
பானுமதி
 
தமிழ் சினிமாவின் முதல் பெண் இசை அமைப்பாளர் என்றால் அது பானுமதிதான். அஸ்டாவதானியாக திகழ்ந்தவர் அவர். நடிப்பு, பாட்டு, இயக்கம், தயாரிப்பு என பல துறைகளில் வெற்றி பெற்றவரால் இசை அமைப்பாளராக மட்டும் வெற்றி பெற முடியவில்லை. சக்கரபாணி, இப்படியும் ஒரு பெண் உள்பட சில படங்களுக்கு இசை அமைத்தார். அதுவும் பெரிதாக ஹிட்டாகவில்லை. பின்பு இசை அமைப்பதை நிறுத்திக் கொண்டார்.
பவதாரிணி
 
இசைஞானி இளையராஜாவின் இசை மகள் பவதாரிணி. சிறந்த பாடகியாக தேசிய விருது வாங்கியவர். நிச்சயம் இளையராஜாவின் திறமையில் பாதியாவது அவருக்கு இருக்கும், ஆனால் அவரால் இசை அமைப்பாளராக ஜெயிக்க முடியவில்லை. மித்ரு மை பிரண்டில் அவர் அமைத்த இசை இன்னும் பேசப்படுகிறது. அதன் பிறகு அமிர்தம், வெள்ளச்சி, போரிட பழகு படங்களுக்கு இசை அமைத்தார். அமிர்தம் தவிர மற்ற படங்கள் இன்னும் வெளிவரவில்லை.
 
ரெய்ஹானா
 
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி ரெய்ஹானாவும் பல படங்களுக்கு இசை அமைத்தார். அவர் இசை அமைத்த படமோ, ஒரு பாடலோ மக்களை கவராமல் போய்விட்டது. ஆனால் அவர் பாடிய பாடல்கள் ஹிட்டானது.
 
ஸ்ருதி ஹாசன்
 
பெயரிலேயே இசையை வைத்திருப்பதால் இசை அமைப்பாளராக பெண்கள் சாதிக்கவில்லை என்கிற குறையை ஸ்ருதி ஹாசன் போக்கி விடுவார் என்று எல்லோரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் உன்னைபோல் ஒருவன் படத்துக்கு பிறகு இசைக்கு குட்பை சொல்லிவிட்டு குட்டைப்பாவடை உடுத்தி நடிக்கப்போய் விட்டார். அவ்வப்போது பாடல்களை மட்டும் பாடி வருகிறார்.
 
எஸ்.லேக்கா
 
காதல் சொல்ல ஆசை என்ற படத்திற்கு இசை அமைத்தார் எஸ்.லேக்கா. இவர் தெலுங்கில் 15 படங்களுக்கு மேல் இசை அமைத்தவர். தமிழில் இசை அமைத்த படம் வெற்றி பெறாமல் போகவே மீண்டும் தெலுங்கு பக்கம் திரும்பி விட்டார். தெலுங்கு இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலியின் சகோதரி இவர்.
 
ஸ்ரீவித்யா
 
தற்போது ஸ்ரீவித்யா என்ற பெண் இசை அமைப்பாளர் என்னை பிடிச்சிருக்கா என்ற படத்தின் மூலம் அறிமுகமாகிறார். கர்நாடக இசையை முறைப்படி கற்று, பல மேடைகளில் பாடி. கீபோர்ட் கற்று இசை அமைப்பாளராகி இருக்கிறார். இசை அமைப்பாளர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன், ராமமூர்த்தி பற்றிய ஒரு இசை ஆவணத் தொகுப்பையும் உருவாக்கி இருக்கிறார். இவர் மட்டுமே இப்போது நம்பிக்கை தரும் இசை அமைப்பாளராக இருக்கிறார். எதிர்காலத்தில் பெண்கள் இசை அமைப்பு துறையில் பெரிய அளவில் சாதிக்ககூடும்.

Comments