எஸ்.ஜே.சூர்யாவின் 'இசை இன்னும் ஒரு சில நாட்களில் டிரைலர்!!!

26th of August 2014
சென்னை:அஜீத்திற்கு மிகப் பெரிய திருப்பு முனையைக் கொடுத்த 'வாலி' படத்தை இயக்கி அறிமுகமானவர் எஸ்.ஜே.சூர்யா. தொடர்ந்து விஜய் நடித்த 'குஷி' படத்தை இயக்கி வெற்றி பெற்று தமிழ் சினிமாவில் வெற்றிகரமான இயக்குனர்களில் ஒருவராக இடம் பிடித்தார். அடுத்து 'குஷி' படத்தை தெலுங்கில் ரீமேக் செய்து, அங்கும் மாபெரும் வெற்றி பெற்றார். அதன் பின் எங்கேயோ உச்சத்திற்குப் போய்விடுவார் என்று பார்த்தால் நடிகராக வேண்டும் என்ற ஆசையில் சில படங்களில் நடித்து காணாமல் போய்விட்டார். சில வருடங்களுக்கு முன் அவர் ஆரம்பித்து தூங்கிக் கொண்டிருந்த 'இசை' படத்தை தற்போது தூசி தட்டி வெளியிட தயாராகிவிட்டார். அக்டோபரில் இந்தப் படம் வெளியாகும் என்று தெரிவித்திருக்கிறார்.

இப்படத்தின் கதையைப் பற்றி படம் ஆரம்பமானபோதே ஒரு சர்ச்சை எழுந்தது. அந்தப் படம் இரண்டு இசையமைப்பாளர்களுக்கு இடையேயான மோதலைப் பற்றிச் சொல்லும் கதையைக் கொண்ட படம் என்றார்கள். அதிலும் குறிப்பாக இந்தப் படத்தில் இசைஞானி இளையராஜாவை மனதில் வைத்துத்தான் அவர் கதை செய்திருப்பதாகப் பலரும் சொன்னார்கள். அதனால்தான் படத்தில் நடிப்பதாக இருந்த பிரகாஷ்ராஜ் கதை கேட்ட பின் படத்தில் நடிக்க மறுத்து விலகிக் கொண்டார். அதேப்போல் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான்தான் இசையமைப்பதாக இருந்தது, அவரும் கதையைக் கேட்டதும் விலகிக் கொண்டார் என அப்போதே செய்திகள் வெளிவந்தன. இந்த நிலையில் புதுமுகம் சாவித்ரி மற்றும் பலர் நடிக்க தானே ஹீரோவாக நடித்து, இசையும் அமைத்து, படத்தை இயக்கி, வெளியிட உள்ளார் எஸ்.ஜே. சூர்யா.

படத்தின் கதையைப் பற்றி எஸ்.ஜே. சூர்யா இதுவரை வாயைத் திறக்கவில்லை. ஆனால், இன்னும் ஒரு சில நாட்களில் படத்தின் டிரைலரை வெளியிட இருக்கிறார்கள். அதன் பின் கதை என்ன என்பது ஓரளவிற்குத் தெரிந்து விடும். அநேகமாக இந்தப் படம் இளையராஜாவைப் பற்றிய கதையாக கற்பனை கலந்து சொல்லப்பட்டிருந்தாலும் பலத்த எதிர்ப்பை சம்பாதிக்கும் என்பதில் ஐயமில்லை.

Comments