15th of August 2014
சென்னை:ஆகஸ்ட்-15 என்றதும் சுதந்திர தினம் ஞாபகம் வருவதுபோலவே சினிமா ரசிகர்களுக்கு ஆக்ஷன் கிங் அர்ஜூனின் பிறந்தநாளும் கூடவே ஞாபகத்துக்கு வருவதை தவிர்க்க முடியாது. 1984ல் ‘நன்றி’ மூலம் தமிழ் திரையுலகில் நுழைந்து, தனது ‘கடமை’யை சரியாக செய்து அப்போதே ‘யார்’ இவர் என அனைவரையும் புருவம் உயர்த்த வைத்தார் அர்ஜூன்.
சுதந்திரதினத்தில் பிறந்ததாலோ என்னவோ இவரது சிந்தனையிலும் நாட்டுப்பற்று ஊறியிருந்தது. அதுதான் அவர் பெரும்பாலான படங்களில் போலீஸ் அதிகாரியாக நடிக்கவும் தூண்டுகோலாக அமைந்தது. இவரது சண்டைக்காட்சிகளுக்காகவே தியேட்டர்களுக்கு வந்த ரசிகர்கள் தான் அதிகம்.
ஒரு நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராக, தயாரிப்பாளராக, பாடகராக என சினிமாவின் அனைத்து தளங்களிலும் கால் பதித்து வெற்றி வாகையும் சூடினார். குறிப்பாக இவர் படங்களின் தொடர் தோல்வியால் துவண்டு விழும் நேரங்களில் எல்லாம், தானே சொந்தமாக படம் இயக்கி மீண்டும் பீனிக்ஸ் பறவையாய் உயிர்த்தெழுவது வழக்கம்.
எல்லாவற்றிற்கும் மேலாக ஷங்கரின் முதல் கதாநாயகன் இவர் என்பதும், ஷங்கரின் படத்தில் நடித்த பின்னர்தான் அர்ஜூனின் நடிப்புக்கு தனி மெருகேறியதும் மறுக்க முடியாத உண்மை. இன்று பிறந்தநாள் காணும் அர்ஜூனுக்கு நமது Poonththalir-Kollywood சார்பாக இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
Comments
Post a Comment