ஸ்ருதிஹாசன் பாட்டுக்கு பிரசாந்த்-நர்கீஸ் ஆட்டம்..!!!

3rd of August 2014
சென்னை:சென்னை மீனம்பாக்கம் அருகில் உள்ள பின்னி மில் வழியாக சென்றபோது உள்ளிருந்து வந்த பாட்டுச்சத்தம் காதை கிழித்தது. அப்படியே வண்டியை பின்னி மில்லுக்குள் நுழைத்தால் ராஜூ சுந்தரம் மாஸ்டர் ‘சாகசம்’ படத்திற்காக பிரசாந்த்தையும் இந்தி நடிகை நர்கீஸ் பக்ரியையும் செம ட்ரில் வாங்கிக் கொண்டிருந்தார்.. அருகில் பரபரப்பாக படமாகும் நடனக்காட்சிகளை அமைதியாக பார்த்தபடி அமர்ந்திருந்தார் இயக்குனர் அருண்ராஜ் வர்மா.
 
படப்பிடிப்பின் இடைவேளை நேரத்தில் பத்திரிகையாளர் சந்திப்புக்கு நேரம் ஒதுக்கி படம் பற்றிய தகவல்களை பகிர்ந்துகொண்டார்கள் பிரசாந்த்தும், நர்கீஸும் கூடவே படத்தின் தயாரிப்பாளர் தியாகராஜனும். தற்போது படமாகும் “காரத்தில் காரத்தில் சில்லி இவ” பாடலை மதன்கார்க்கி எழுத தமன் இசையில் ஸ்ருதிஹாசன் பாடியுள்ளார்.
 
ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் ஆடும் நர்கீஸ் தனக்கு தமிழ்ப்படத்தில் நுழைய ‘சாகசம்’ படம் ஒரு நுழைவுச்சீட்டாக அமைந்துள்ளது என்று கூறினார். தமிழில் இது எண்ட்ரி என்பதால்தான் ஒரு பாடலுக்கு ஆட ஒப்புக்கொண்டாராம் நர்கீஸ் பக்ரி. ஆனால் இதுவே முதலும் கடைசியுமான பாடலாக இருக்குமாம். அடுத்ததாக ஹீரோயினாக மட்டும் தான் நடிப்பாராம்.
யார் இந்த நர்கீஸ் பக்ரி என கேட்கிறீர்களா.?
 
இந்தியில் ரன்பீர் கபூர், ஜான் ஆபிரகாம், ஷாகித் கபூர் ஆகியோருடன் ஹிட் படங்களில் நடித்தவர்.. குறிப்பாக ராக்ஸ்டார், படா போஸ்டர் நிக்லா ஹீரோ, மெட்ராஸ் கபே ஆகிய ஹிட் படங்களில் இவரின் பங்களிப்பும் அதிகம்.

Comments