சிக்ஸ் பேக்கில் களமிறங்கத் தயாராகும் ஐபிஎல் கிரிக்கெட் இந்திய வீரர் ஸ்ரீசாந்த்!!!

24th of August 2014
சென்னை:ஐபிஎல் கிரிக்கெட் ஊழலால் தடை விதிக்கப்பட்ட கேரள மாநிலத்தைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், தமிழ், தெலுங்கில் தயாராகும் படம் ஒன்றில் இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார். அதே சமயம் அவர் நடிக்கவும் தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. சில வாரங்களுக்கு முன் தெலுங்கில் உள்ள பிரபல இயக்குனர்கள் சிலரைச் சந்தித்து வெளிப்படையாக வாய்ப்பு கேட்டிருக்கிறார். அதன் பலனாக அவரும் நடிகராக அறிமுகமாக உள்ளதாகத் தெரிகிறது. இதற்காக சிக்ஸ் பேக் உடலமைப்பைக் கொண்டு வரவும் அவர் கடுமையாகப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறாராம்.
 
தற்போதுதான் ஒரு தொலைக்காட்சி நடன நிகழ்ச்சியில் பங்கு கொண்டு அவரது நடனத் திறமையை மேலும் வெளிப்படுத்தியிருந்தார். ஏற்கெனவே ஸ்ரீசாந்த் நன்றாக நடனம் ஆடுவார் என்பது குறிப்பிடத்தக்கது. தெலுங்குத் திரையுலகத்தைப் பொறுத்தவரை நடனம் ஆடத் தெரிந்தவர்களைத்தான் ரசிகர்கள் அதிகம் ரசிப்பார்கள். அது ஸ்ரீசாந்திடம் ஏற்கெனவே இருப்பதால் அவருடைய அறிமுகம் அங்கு சிறப்பாக இருக்க வாய்ப்புள்ளது.
 
தெலுங்கைத் தொடர்ந்து ஸ்ரீசாந்த், பாலிவுட்டிலும் நடிகராக அறிமுகமாக ஆசைப்படுகிறாராம். இனி, கிரிக்கெட் ஆட முடியாத சூழ்நிலையே இருப்பதால் திரையுலகத்திலாவது ஜொலிக்கலாம் என முடிவெடுத்திருக்கிறாராம். ஆமாம்...இங்குதான் நடிக்க எந்தத் தடையும் விதிக்க முடியாதே...

Comments