நம் அனைவரது இதயத்தில் இருக்கும், சாக்கடையை அகற்ற, புத்தகம் படிப்பது ஒன்றே சிறந்த வழி: இளையராஜா!!!

2nd of August 2014
சென்னை:நம் அனைவரது இதயத்தில் இருக்கும், சாக்கடையை அகற்ற, புத்தகம் படிப்பது ஒன்றே சிறந்த வழி, என, புத்தக திருவிழாவில், இசையமைப்பாளர் இளையராஜா பேசினார். ஈரோடு, வ.உ.சி., பூங்காவில், மக்கள் சிந்தனை பேரவை சார்பில், புத்தகத்திருவிழா நேற்று துவங்கி, 12ம் தேதி வரை நடக்கிறது.
 
புத்தக திருவிழாவை துவக்கி வைத்து, இசையமைப்பாளர் இளையராஜா பேசியதாவது: ஈரோட்டுக்கு, கடந்த, 1960-68ம் ஆண்டு வரை, பல முறை, என் சகோதரர்களுடன் வந்துள்ளேன. அப்போது, நான் பார்த்த நகருக்கும், இப்போது நீங்கள் பார்க்கும் ஈரோட்டுக்கும், நிறைய வித்தியாசம் இருக்கிறது. அந்த காலத்தில் டிரம்ஸ், கிடாருடன் சென்னை வந்து, இசையமைத்தோம். தற்போது, ஒரு கம்ப்யூட்டரிலேயே, புரியாத இசையை, தந்து விடுகின்றனர். அந்தளவுக்கு, இசைத்துறையிலும் நவீனம் புகுந்து விட்டது.
 
இதயம் ஒரு கோவில் என்ற பாடலுக்கேற்ப, நம் அனைவரது இதயமும், கோவில் தான். அதில் உள்ள சாக்கடைகளை அகற்றினால், கோவிலாக மாறிவிடும். அதற்கு புத்தகங்களை படிக்க வேண்டும். ஒவ்வொரு மனிதரிடமும், ஒவ்வொரு விதமான அனுபவங்கள் இருக்கும். அதை தெரிந்து கொள்ள தான், படிக்க வேண்டியுள்ளது. அதற்காக புத்தகம் படித்தால் தான், அறிவு வளரும் என்று கூற முடியாது.
திருவள்ளூவர், திருக்குறளை புதிதாக எழுதினார். ஏற்கனவே, தெரிந்ததை அவர் எழுதவில்லை. இந்த உலகமே, நாத மயமானது. இளையராஜா என்ற வார்த்தையை உச்சரித்தால் மட்டுமே, உங்களுக்கு என்னை பற்றிய எண்ணங்கள் தோன்றும். கற்க கசடற என்பதற்கேற்ப, எந்த விஷயத்தையும் முழுமையாக கற்றறிவது அனைவருக்கும் நல்லது. இவ்வாறு அவர் கூறினார்.
 
மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன், துணை மேயர் பழனிசாமி, எஸ்.கே.எம்.மயிலானந்தன், வேளாளர் கல்லூரி தாளாளர் சந்திரசேகர் உட்பட பலர் பங்கேற்றனர். புத்தக கண்காட்சி, தினமும், காலை 11 முதல், இரவு, 9.30 மணி வரை செயல்படும். தினமும், மாலை, 6 மணிக்கு, பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது.

Comments