ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி: விமர்சனம்!!!

22nd of August 2014
சென்னை:தயாரிப்பு : ராஜம் புரொடக்ஷன்ஸ்
இயக்கம் : எல்.ஜி.ரவிச்சந்தர்
நடிப்பு : பரத், நந்திதா, தம்பி ராமையா, கருணாகரன்
ஒளிப்பதிவு : பி.ஜி.முத்தையா
இசை : சைமன்
எடிட்டிங் : வி.விஜய்
ஒரு கட்டாய வெற்றிக்காகக் காத்திருக்கும் பரத் தனது 25-ஆவது படமான ‘ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி’யை ரொம்பவே நம்பியிருக்கிறார்.அதற்கு பலன் கிடைத்திருக்கிறதா?

கதைக்களம்

கல்வியின் அவசியத்தை நமது பாரம்பரிய மருத்துவ முறையின் மகத்துவத்தோடு சொல்ல வந்திருக்கிறது இந்த ‘ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி’.

சித்த வைத்திய பரம்பரையின் ஐந்தாவது தலைமுறை வாரிசான பரத் ஒரு எழுதப் படிக்கத் தெரியாதவர். அதனால் அவருக்கு நல்ல படித்த பெண் ஒருவரை திருமணம் செய்து வைக்க நினைக்கிறது அவரது குடும்பம். வரன்கள் எதுவும் சரியாக கைகூடாததால், காதல் மூலம் தனது லட்சியத்தை நிறைவேற்றலாம் என கல்லூரி வாசலில் தவம் கிடந்த நந்திதாவை சந்திக்கிறார். அவரின் முகவரியைத் தெரிந்து கொண்டு, பெண் பார்க்கப் போகலாம் என நந்திதாவை பின் தொடர்கிறார்கள் பரத்தும் அவரது நண்பர் கருணாகரனும். இதனால் நந்திதாவின் அப்பா தம்பிராமையாவிடம் இருவரும் சிக்க, அங்கிருந்து தப்பிப்பதற்காக பரத்தை ஒரு டாக்டர் என கருணாகரன் பொய் சொல்கிறார். பரத் ஒரு டாக்டர் எனத் தெரிந்ததும் தம்பி ராமையா தன் மகளுக்கு கட்டி வைக்க முடிவு செய்கிறார். சுமூகமான பேச்சுவார்த்தைக்குப் பின்னர், சுபமாக நடந்து முடிகிறது பரத் & நந்திதா கல்யாணம். ஆனால், அதன் பிறகுதான் படத்தில் ஒரு மிகப்பெரிய திருப்பம் ஏற்படுகிறது. அதை வைத்து நடக்கும் காமெடி, சென்டிமென்ட் கலாட்டாவே இப்படத்தின் இரண்டாம் பாதி.

படம் பற்றிய அலசல்

ஒரு நல்ல கருத்தை நமது கலாச்சாரத்தின் பின்னணியோடு சொல்ல முயன்றதற்காக இயக்குனர் எல்.ஜி.ரவிச்சந்தருக்கு பாராட்டுகள். ஆனால், அதற்காக திரைக்கதையிலோ, கதாபாத்திரங்களின் உருவாக்கத்திலோ எந்தவித யதார்த்தத்தையும் அவர் கையாளாதது வருத்தமே! தனது படத்தின் நாயகன் படிப்பறிவில்லாதவனா? அல்லது அதிமுட்டாளா? என்பது இயக்குனருக்கே வெளிச்சம். அடுத்தடுத்து காட்சிகளை நகர்த்திக் கொண்டே போயிருக்கிறார்களே தவிர ‘லாஜிக்’கைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படவில்லை. அதிலும் இப்படத்தின் க்ளைமேக்ஸெல்லாம் 70, 80களிலேயே சலித்துப் புளித்துப்போன ஒன்று. காமெடி செய்ய வேண்டும் என்ற கொள்கையோடு அடுத்தடுத்து ஒவ்வொரு காமெடி நடிகராக ஆஜராகிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் சிரிப்புதான் வரவில்லை!

அதேபோல் இப்படத்தின் டெக்னிக்கல் விஷயங்கள் எதுவுமே படத்திற்கு கைகொடுக்கவில்லை. ‘பூ’, ‘சகுனி’ போன்ற படங்களில் பணியாற்றிய பி.ஜி.முத்தையாவா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்? நம்பவே முடியவில்லை. பின்னணி இசையும், பாடல்களும் சுமார் ரகம்தான்.

‘‘பழைய ஃபார்முலாவை பின்பற்றி எந்தவித சிரத்தையும் இல்லாமல் இப்படம் எடுக்கப்பட்டிருக்கிறதோ!’’ என்ற உணர்வைத் தருகிறது படம் முடித்து வெளியே வரும்போது.

நடிகர்களின் பங்களிப்பு

தங்களின் கதாபாத்திரங்கள் சரியாக வடிவமைக்கப்படாத பட்சத்தில்கூட தங்களுக்குக் கொடுத்த வேலையை பரத்தும், நந்திதாவும் நன்றாகவே செய்திருக்கிறார்கள். ‘555’ படத்தில் பார்த்த இரும்பு உடம்பு பரத்தா இது? என்ற ஆச்சரியம் ஏற்படுத்தும் வகையில் ‘சிகாமணி’க்காக அக்மார்க் கிராமத்தானாக மாறியிருக்கிறார். டான்ஸ், ஃபைட் என வழக்கம்போல் அதே அதிரடி பரத். பாடல் ஒன்றில் மாடர்ன் டிரஸ்ஸில் குத்து டான்ஸ் ஆடி ரசிகர்களை குஷிப்படுத்தியிருக்கிறார் நந்திதா. தம்பி ராமையா, கருணாகரன், மனோபாலா, இமான் அண்ணாச்சி, சாம்ஸ் உட்பட இப்படத்தில் 20க்கும் மேற்பட்ட காமெடியன்கள். அதில் படம் முழுக்க நிறைந்திருப்பது தம்பி ராமையாவே. ஆனால், ‘கிச்சு கிச்சு’ மூட்டுவதற்குப் பதில் மனிதர் போரடிக்கிறார். மற்றவர்கள் ஆங்காங்கே வந்து போகிறார்கள்.

பலம்

1. நல்ல கருத்தை மக்களுக்குச் செல்ல முயன்றிருக்கும் படத்தின் கருத்து
2. ஒரு சில இடங்களில் சிரிக்க வைத்திருக்கும் நகைச்சுவை காட்சிகள்
3. பரத் மற்றும் நந்திதாவின் பங்களிப்பு

பலவீனம்

1. படத்துடன் பயணிக்க முடியாத அளவுக்கு லாஜிக்கை மறந்த திரைக்கதை.
2. ஏற்றுக்கொள்ள முடியாதபடி உருவாக்கப்பட்டுள்ள சில காட்சிகள்.
3. ஒளிப்பதிவு, பின்னணி இசை, பாடல்கள், எடிட்டிங்

மொத்தத்தில்....

காமெடியையும், காட்சி அமைப்பையும் இன்னும் கொஞ்சம் சரிவரக் கையாண்டிருந்தால், ‘ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி’ பரத்திற்கு 25-ஆவது படம் என சொல்லிக்கொள்ளும்படி அமைந்திருக்கும். ஆனால், இயக்குனர் கொடுத்த வைத்தியம் ரசிகர்களை குஷிப்படுத்துவதற்குப் பதில் களைப்படைய வைத்திருக்கிறது.

ஒரு வரி பஞ்ச் : சிகிச்சை பலனளிக்கவில்லை!

ரேட்டிங் : 2.5 / 10

Comments