நடிகைகளுக்கு சுதந்திரம் இருக்கிறதா? லேட்டஸ்ட் கனவுக்கன்னி சமந்தா பேட்டி!!!

15th of August 2014
சென்னை:தமிழ் ரசிகர்களின் லேட்டஸ்ட் கனவுக்கன்னி சமந்தா அளித்த பேட்டி இது.

சினிமாவில், பெண்களுக்கு சுதந்திரம் இருக்கிறதா?

மற்ற துறைகளை விட, சினிமாவில் பெண்களுக்கு நிறைய சுதந்திரம் இருக்கிறது. சினிமாவில் ஆணாதிக்கம் மிகுந்திருந்தாலும், பெண்களுக்கு எந்த வன்கொடுமைகளும் இல்லை. இன்னும் சொல்லப்போனால், பெண்கள் மதிக்கப்படுகிறார்கள். உதாரணத்துக்கு சமீபத்தில் நான் நடித்து முடித்த அஞ்சான் படக்குழுவினரை சொல்லலாம். குறிப்பாக, டைரக்டர் லிங்குசாமி கதாநாயகன்&கதாநாயகி என்ற வேறுபாடு பார்க்காமல், எல்லோரையும் சமமாக நடத்தினார். கேமராவுக்கு பின்னால், எல்லோரும் சமமாக நடத்தப்பட்டார்கள்.


தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழி படங்களிலும் நடிக்கிறீர்கள். உங்களுக்கு ரசிகர்கள் அதிகமாக இருப்பது தமிழ்நாட்டிலா, ஆந்திராவிலா?
நான் சென்னை பல்லாவரத்தில் வளர்ந்த பெண் என்றாலும், எனக்கு பணம், புகழ், செல்வாக்கு எல்லாம் கொடுத்தது, தெலுங்கு பட உலகம்தான். அங்குதான் நான் அறிமுகமானேன். என் முதல் படம், தெலுங்குதான். அதனால், தமிழ்நாட்டை விட, ஆந்திராவில் எனக்கு ரசிகர்கள் அதிகமாக இருக்கிறார்கள். ஆனாலும், இந்த வருடம் எனக்கு மிக முக்கியமான வருடம். அஞ்சான் படத்தை அடுத்து நான் நடித்துள்ள கத்தி, பத்து எண்றதுக்குள்ள... ஆகிய தமிழ் படங்கள் வர இருக்கின்றன. இந்த வருடத்தில் எனக்கு தமிழிலும் ரசிகர்கள் எண்ணிக்கை அதிகமாகும் என்று கருதுகிறேன்.

 ‘நான் ஈ’ படத்தில் உங்கள் மீது சுதீப் ஒருதலைக்காதல் கொண்டது போல் நிஜவாழ்க்கையில் உங்களை யாராவது ஒருதலையாக காதலித்து இருக்கிறார்களா?

நான், ஒருதலையாக ஒருவரை காதலித்து இருக்கிறேன். சில வருடங்களுக்கு முன் அது நடந்தது. அவர் நடிகர் அல்ல. நான், என் காதலை அவரிடம் தெரிவித்தபோது அவர், நோ சொல்லி விட்டார்.

 காதல் தோல்வி உங்களுக்குள் வலியை ஏற்படுத்தியதா?

எந்த வலியும் ஏற்படவில்லை. அதை நான் சுலபமாக எடுத்துக் கொண்டேன். பெரிதுபடுத்தவில்லை.

 இப்போதைய நம்பர்&1 கதாநாயகி நீங்களா, நயன்தாராவா?

இப்போது, நம்பர்&1 என்று யாரும் கிடையாது. வெள்ளிக்கிழமை தோறும் பல படங்கள் திரைக்கு வருகின்றன. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நம்பர்&1 கதாநாயகி மாறிக்கொண்டே இருக்கிறார்கள்.

 மிக சிறந்த அழகி என்று எல்லோராலும் பாராட்டப்படுகிற உங்களுக்கு, உங்களிடமே பிடித்தது எது?

என் புன்னகை!

 உங்களுக்கு தோல் நோய் இல்லை என்பதை காட்டுவதற்காகவே அஞ்சான் படத்தில் படுகவர்ச்சியாக நடித்து இருக்கிறீர்கள் என்று பேசப்படுகிறதே?
அஞ்சான் படத்தில் எனக்கு அப்படி ஒரு வேடம். அந்த வேடத்துக்காகவே கவர்ச்சியாக நடித்து இருக்கிறேன். அப்படி நடிக்க வைத்தவர், லிங்குசாமிதான். இந்த படத்துக்கு நேர்மாறாக, கவுதம் வாசுதேவ் மேனன் டைரக்ஷனில் மூடிக்கொண்டு நடித்தேன். லிங்குசாமி என்னை கவர்ச்சியாக காட்டியிருக்கிறார். கவுதம் வாசுதேவ் மேனன் கொஞ்சம் கூட கவர்ச்சி வேண்டாம் என்றார். இரு வேறுபட்ட கதாபாத்திரங்களில் என்னால் நடிக்க முடியும் என்பதை நிரூபித்து இருக்கிறேன்.

 உங்கள் எதிர்கால திட்டம் என்ன?

கதாநாயகியாக நீடித்து நிலைத்து நிற்கணும். தமிழில், நல்ல படங்கள் பண்ணணும். கதாநாயகிகள் ரொம்ப வருடம் நீடித்து நிலைப்பது அபூர்வம். அந்த அபூர்வத்தை செயல்படுத்தி காட்டணும்.

 விஜய், விக்ரம், சூர்யா மூன்று பேருடனும் நடித்த அனுபவங்களை சொல்ல முடியுமா?

கேமராவுக்கு பின்னால் விஜய் மிக அமைதியானவர். அதிகம் பேச மாட்டார். கேமராவுக்கு முன்னால் வந்து விட்டால், எப்படி மாறுகிறார்? என்று எனக்கு ஒரே ஆச்சரியமாக இருக்கிறது. நடிக்கும்போது அவருக்குள் ஒரு பவர் வந்து விடுகிறது. அந்த மேஜிக் எப்படி நடக்கிறது? என்று தெரியவில்லை.

சூர்யா, தொழில் மீது மிகுந்த பக்தி கொண்டவர். டைரக்டரின் நடிகர். எவ்வளவு நேரமானாலும், எத்தனை டேக் எடுத்தாலும் முகம் சுளிக்காமல் நடித்துக் கொடுப்பார். அவருடன் மீண்டும் ஒரு படம் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.

விக்ரம் ஜோடியாக இப்போதுதான் நடிக்க ஆரம்பித்து இருக்கிறேன். அவர் ஒரு வியக்க தகுந்த நடிகர். அவருடன் நடிப்பதை பெருமையாக கருதுகிறேன்.
 உங்கள் திருமணம் எப்போது? அது காதல் திருமணமாக இருக்குமா?

நிச்சயமாக, காதல் திருமணம்தான். வீட்டு பக்கத்திலேயே ஒரு பையன் இருக்கிறான். ஆனால், மூன்று வருடங்கள் கழித்துதான் திருமணம் செய்து கொள்வேன்.

இந்தியாவில், பெண்களுக்கு முழு சுதந்திரம் இருப்பதாக கருதுகிறீர்களா?
இந்திய பெண்களுக்கு முழு சுதந்திரம் இருக்கிறது. மற்ற நாடுகளை ஒப்பிடும்போது, இந்திய பெண்களுக்கு அதிக சுதந்திரம் இருப்பதாக கருதுகிறேன். வருங்காலத்தில், இந்திய பெண்களுக்கு இன்னும் அதிக சுதந்திரம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.

Comments