தனுஷின் கோரிக்கையை புறக்கணித்த விவேக்!!!

9th of July 2014
சென்னை:தனுஷ் நடித்துவரும் ‘வேலையில்லா பட்டதாரி’ அவருக்கு 25வது படம். தனுஷ் நடித்த ‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’ படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய வேல்ராஜ் முதன்முதலாக இந்தப்படத்தின் மூலம் டைரக்‌ஷனில் அடியெடுத்துவைத்திருக்கிறார்.
 
பொதுவாகவே தனுஷ் – விவேக் காமெடி காம்பினேஷன் 100 சதவீதம் காமெடிக்கு உத்தரவாதம் தரும்.. இதை ‘படிக்காதவன்’, ‘மாப்பிள்ளை’, ‘உத்தம புத்திரன்’ படங்களில் இவர்கள் இருவரும் ஏற்கனவே நிரூபித்துள்ளனர்.
இப்போது மீண்டும் ‘வேலையில்லா பட்டதாரி’யில் தனுஷுடன் கைகோர்த்துள்ளார் விவேக். ஆனால் இந்தப்படத்தில் நடிக்க முதலில் விவேக் மறுத்துவிட்டாராம். இந்த விஷயத்தை நேற்று நடைபெற்ற வேலையில்லா பட்டதாரி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின்போது விவேக்கே தெரிவித்தார்..

இந்தப்படம் விஷயமாக தனுஷும் நானும் பேசுவதற்காக தாஜ் ஹோட்டலில் சந்தித்தோம். அப்போது இந்தப்படத்தில் நான் நடிக்க வேண்டிய கேரக்டர் பற்றி சொன்னார். அந்த கேரக்டர் இடைவேளைக்குப்பின் தான் வருவதாலும் காட்சிகள் குறைவாக இருப்பதுபோல தோன்றியதாலும் தனுஷிடம் இந்தப்படத்தில் நான் நடிக்கவில்லை என்று சொல்லிவிட்டு சில நிமிடங்களில் அங்கிருந்து கிளம்பி வீட்டுக்கு வந்துவிட்டேன்..
 
அப்போது தனுஷ் சொன்னார், “சார் இந்த கேரக்டரில் வேறு ஆளை நடிக்கவைத்துவிட முடியும். அப்படி எடுத்து அந்தக்கேரக்டரின் வெற்றியோடு உங்களிடம் வந்து மீண்டும் எனது படத்தில் நடிக்க அழைப்பேன்.. ஆனால் இந்த கேரக்டரில் நீங்கள் நடிக்காமல் போய்விட்டீர்களே என்கிற வருத்தம் அப்போதும் இருக்கும் என்றார்.
 
அதனால் வீட்டுக்கு வந்த பத்து நிமிடங்களில் தனுஷுக்கு போன் செய்து நடிப்பதாக சம்மதம் தெரிவித்தேன். அதற்கு காரணம் இருக்கிறது. தனுஷ் அவர் படங்களில் நான் நடிக்கவேண்டிய கேரக்டர் இருந்தால் நிச்சயம் என்னை விடமாட்டார். ‘படிக்காதவன்’, ‘மாப்பிள்ளை’ என இரண்டு ஹிட்டுகளுக்கு பிறகு ‘உத்தமபுத்திரன்’ படத்தில் நடிக்க அவர் அழைத்தபோதும் இப்படித்தான் மறுத்தேன்.
 
காரணம் அதில் எனக்கு டயலாக்குகள் குறைவாக இருப்பதாக நினைத்தேன். ஆனால் தனுஷ் தான் என்னை வற்புறுத்தி அந்தப்படத்தில் நடிக்கவைத்தார். ஆனால் எங்களது முந்தைய இரண்டு படங்களையும் விட அந்தப்படம் தான் எனக்கு நிறைய விருதுகளை வாங்கித்தந்தது.
தனால் தனுஷ் என்னை அழைக்கிரா என்றால் நிச்சயம் அது முக்கியத்துவம் வாய்ந்ததாகத்தான் இருக்கும்.. அதனாலே தான் இந்தப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். ஆனால் படம் நன்றாக வந்திருப்பதை, அதில் என் கேரக்டர் நன்றாக வந்திருப்பதை பலர் சொல்ல கேட்கும்போது தனுஷின் மீதான மதிப்பு அதிகமாகிறது” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார் விவேக். 
 
இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய தனுஷ், “விவேக் சார் சொன்னது உண்மைதான்.. ஆனால் இது அத்தனையையும் விட என்னுடைய 25வது படத்தில் அவரும் இருக்கவேண்டும் என நினைத்தது தான் அவரை அழைக்க முக்கிய காரணம்.” என்று கூறி விவேக்கை நெகிழ வைத்தார்.
இந்தப்படத்தில் தனுஷின் ஜோடியாக அமலாபால் நடித்தாலும் ஒரு முக்கியமான சிறப்புத்தோற்றத்தில் ‘இவன் வேற மாதிரி’ சுரபியும் நடித்திருக்கிறார். படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் தமிழ்நாடு முழுவதும் வெளியிட இருக்கிறார்.

Comments