அடுத்த சூப்பர் ஸ்டாராக தன்னை பிரகடனப்படுத்திக் கொள்ளும் நடிகர் விஜய்!!!

20th of July 2014
சென்னை:அடுத்த சூப்பர் ஸ்டாராக தன்னை பிரகடனப்படுத்திக் கொள்ளும் நடிகர் விஜய், அடுத்த மாதம், மதுரை தமுக்கம் மைதானத்தில் இதற்காக பிரமாண்ட விழா நடத்த தீர்மானித்திருக்கிறார். தீவிரமாகஅரசியலில் இறங்குவதற்கு, இந்த விழாவை அவர் பயன்படுத்திக் கொள்ள விரும்புவதால், அரசியல் அரங்கில், இந்த விழா குறித்து பரபரப்பாக பேசுகின்றனர்.

இதுகுறித்து, நடிகர் விஜய் தரப்பில் கூறியதாவது:நடிகர் விஜய்க்கு தமிழக அரசியலில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்பது, அவருக்கு தீராத தாகம். அதனால் தான், அவர் ரசிகர் நற்பணி மன்றத்தை வேகமாக செயல்பட வைத்தார்.அரசியல் தலைவர்கள் போல அவர், தன்னுடைய பிறந்த நாள் விழாவை, நலத் திட்ட உதவிகள் மூலமாக கொண்டாடி வருவதும் இதற்காகத்தான்.


ஆனால், அவருடைய அப்பா சந்திரசேகர், அவரை உடனே அரசியலுக்கு கொண்டு வந்து, விரைவிலேயே தமிழகத்தின் முதல்வராக்கி விட வேண்டும் என விருப்பப்பட்டு, சில காரியங்களை செய்ய, அது விஜய்க்கு எதிராக முடிந்தது.விஜய் நடித்து வெளியான, தலைவா திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டதன் பின்னணி இதுதான்.

அடுத்தடுத்தும், இப்படிப்பட்ட பிரச்னைகளை சந்திக்கக்கூடாது என்பதில், விஜய் உறுதியாக இருக்கிறார். அதனால்தான், தேர்தலுக்கு முன், நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். பா.ஜ., கூட்டணிக்கு தன் ஆதரவையும் தெரிவித்தார். அப்போது, மோடியிடம் தமிழகத்தில் அரசியல் ரீதியில் இருக்கும் நெருக்கடிகள் குறித்து சொன்ன விஜய், பாதுகாப்பும் கோரினார்.
மத்தியில் பா.ஜ., ஆட்சிக்கு வந்ததும், தமிழகத்தில் உங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லாமல் பார்த்துக் கொள்ளப்படும் என, நரேந்திர மோடி, விஜயிடம் சொன்னார்.

அந்த தெம்பில், விஜய்க்கு மீண்டும் அரசியல் ஆர்வம் துளிர்த்திருக்கிறது. அதற்கு தேவையான காரியங்களை அவர் செய்ய ஆரம்பித்து விட்டார். அதன் முதல் கட்டம் தான், தமிழகத்தின் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்பது போல கருத்து கணிப்பு நடத்தி, அதில் தன்னை, அடுத்த சூப்பர் ஸ்டாராக முன்னிலைப்படுத்தினார்.அடுத்த கட்டமாக, இந்த சூப்பர் ஸ்டார் பட்டத்தை வைத்து, ரசிகர்களை கூட்டி, விழா எடுக்க ஏற்பாடுகள் நடக்கிறது. விழாவை, அரசியல் விழா போல நடத்த திட்டமிட்டுள்ளார்.மதுரையில் நடக்கப் போகும் விழா, வெற்றியாக அமையுமானால், தமிழகம் முழுவதும் இப்படிப்பட்ட விழாக்களை நடத்தவும் தீர்மானித்துள்ளார்.

இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் வாயிலாக மக்கள் செல்வாக்கை நிரூபிப்பதன் மூலம், விரைவில் வெளியாக இருக்கும் தன்னுடைய, கத்தி படத்துக்கும் சிக்கல் எதுவும் இருக்காது என்றும் விஜய் நினைக்கிறார்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

Comments