ஜூலை இறுதியில் ‘காவியத்தலைவன்’ இசைவெளியீட்டு விழா.!!!


3rd of July 2014
சென்னை:வெயில்,அங்காடித்தெரு,அரவான் படங்களை தொடர்ந்து வசந்தபாலன் இயக்கியுள்ள புதிய படம் ‘காவியத்தலைவன்’. சித்தார்த், பிருத்விராஜ் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கும் இந்தப்படத்தில் வேதிகா கதாநாயகியாக நடிக்கிறார். இன்னொரு கதாநாயகியாக இந்தி நடிகை அனைக்கா சோட்டி காவியத்தலைவன் திரைப்படத்தில் நடிக்கிறார்.
 
அதாவது அரவானுக்குப் பின் வசந்தபாலனுக்கு ஒரு பீரியட் படம், உருமிக்குப்பிறகு பிருத்விராஜுக்கு ஒரு பீரியட் படம், பரதேசிக்குப்பிறகு ஒரு வேதிகாவுக்கு ஒரு பீரியட் படம் என மூவருக்குமே ஒரு ஆச்சர்யமான ஒற்றுமையாக அமைந்துவிட்டது காவியத்தலைவன்.
இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்னால், தமிழ்நாட்டில் பெரும் செல்வாக்கோடு வாழ்ந்த நாடகக் கலைஞர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் சுதந்திரப் போராட்டமும் ஒரு முக்கியப் பகுதியாக வைக்கப்பட்டுள்ளது.

ஒளிப்பதிவுக்கு நீரவ்ஷா ஆயிரத்தில் ஒருவன், ஆர்ட் டைரக்‌ஷனுக்கு ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் கலை இயக்குநராக பணிபுரிந்த சந்தானம், தேசியவிருது பெற்ற எடிட்டர் கே.எல்.பிரவினின் படத்தொகுப்பு, வசனத்திற்கு பிரபல இலக்கிய எழுத்தாளர் ஜெயமோகன் என பிரமாண்ட கூட்டணியை உருவாக்கி வேலை வாங்கியிருக்கிறார் வசந்தபாலன்.
 
இவை அனைத்திற்கும் கிரீடம் வைத்தது மாதிரி ஏ.ஆர்.ரகுமானின் இசையும் சேர்ந்துகொண்டதால், காவியத்தலைவனை காவியமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் வசந்தபாலன். இந்தப்படத்தின் போஸ்ட் புரொடக்சன் வேலைகள் துரிதமாக நடந்துகொண்டிருக்கின்றன. இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழாவை இந்தமாத இறுதியில் நடத்த வசந்தபாலன் திட்டமிட்டுள்ளார். அதே வேகத்தோடு படத்தையும் ஆகஸ்ட் இறுதியில் ரிலீஸ் செய்துவிடும் ஐடியாவும் வசந்தபாலனுக்கு இருக்கிறதாம்.

Comments