14th of July 2014
சென்னை:இயக்குநர் சீமான் மற்றும் சுசிகணேசனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய நாகேந்திரன் ‘நீயெல்லாம் நல்லா வருவடா’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இந்தப்படத்தில் விமலும், இயக்குனர் சமுத்திரக்கனியும் கதாநாயகர்களாக நடிக்கின்றனர்.
அறிந்தும் அறியாமலும்’, ‘பட்டியல்’ போன்ற படங்களை தயாரித்த வெளிநாடுவாழ் தமிழ்ப்பெண்ணான ‘புன்னகைப்பூ’ கீதா, இந்தப்படத்தில் ஹீரோயினாகவும் அறிமுகமாகிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்கிறார். காமெடி கலந்த ஆக்ஷன் படமாக உருவாகி இருக்கும் இந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் டீசர் நேற்று வெளியிடப்பட்டது.
இந்த விழாவில் பேசிய நாகேந்திரன், “இந்தப்படத்தின் தயாரிப்பாளரை மூன்று முறைதான் சந்தித்துள்ளேன். அவரிடம் இந்தப்படத்தின் கதையை சொல்வதற்காக காரில் மீனம்பாக்கம் ஏர்போர்ட் கூட்டிச்சென்றார்கள்.. வி.வி.ஐ.பிக்கள் மட்டுமே செல்லகூடிய வழியில் உள்ளே அழைத்து சென்றார்கள். அங்கே நின்றிருந்த தனி விமானத்தில் ஏறச்சொன்னார்கள்.. அதில் ஏறியதும் விமானம் புறப்பட்டது..
அங்கே அமர்ந்திருந்த தயாரிப்பாளரிடம் நான் கதை சொல்ல ஆரம்பித்தேன்.. முடிக்கும்போது மதுரை விமான நிலையம் வந்துவிட்டது. அங்கிருந்து காரில் நேராக பழனி முருகன் கோவிலுக்கு போய் சிற்ப்பு தரிசனத்துடன் எனக்கு பரிவட்டமெல்லாம் கட்டப்பட்டது. இப்படி ஒரு வாய்ப்பு இதுவரை எந்த ஒரு இயக்குனருக்கும் கிடைத்திருக்காது என்றுதான் சொல்வேன்” என தான் கதை சொன்ன அனுபவம் குறித்து சிலிர்ப்புடன் பகிர்ந்துகொண்டார் நாகேந்திரன்.
இந்த விழாவில் இயக்குனர்கள் எஸ்.பி.ஜனநாதன், கரு.பழனியப்பன், லிங்குசாமி, வெற்றிமாறன், சமுத்திரக்கனி, ஜெயம் ரவி என சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொண்டு டீசரை வெளியிட்டனர். எஸ்.ஜி.பிலிம்ஸ் மற்றும் கிளாப் சினிமாஸ் இணைந்து இந்தப்படத்தை தயாரிக்கிறார்கள்.
Comments
Post a Comment