கோடீஸ்வரன் எவனாவது பாக்ஸர் ஆகியிருக்கானா?” கொந்தளிக்கும் ஜெயம் ரவி!!!

2nd of July 2014
சென்னை:வட சென்னையின் குத்துச்சண்டை கலாச்சாரத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் படம் ‘பூலோகம்’. ஜெயம் ரவி ஜோடியாக த்ரிஷா நடிக்க, ஆஸ்கர் ஃபிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிப்பில், கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில், ஸ்ரீகாந்த் தேவாவின் இசையமைப்பில் உருவாகியுள்ளது இந்த ‘பூலோகம்’.

மிக நீண்ட நாட்களாக தயாரிப்பில் உள்ள இந்தப்படம் விரைவில் வெளிவர இருக்கிறது. அதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு  நடைபெற்றது. இதில் பூலோகம் படத்தின் ட்ரெய்லரையும் இரண்டு பாடல்களையும் திரையிட்டுக் காட்டினார்கள்.


அதில் குத்துச்சண்டை வீரனாக தனது உக்கிரமான நடிப்பை ஜெயம் ரவி காட்டியிருந்ததை உணர முடிந்தது. குறிப்பாக “கோடீஸ்வரன் எவனாவது பாக்ஸர் ஆகியிருக்கானா?” என அவர் கோபத்துடன் ஒரு வசனம் பேசுகிறார். அது பொட்டில் அடித்தாற்போன்ற உண்மை. கிரிக்கெட், டென்னிஸ் விளையாட்டுக்களை நோக்கிச்செல்லும் பணக்கார வர்க்கம் ஏன் பாக்சிங் விளையாட்டை நோக்கி வருவதில்லை என்கிற கேள்வியை இந்தப்படம் எழுப்பும்.

இந்த விழாவில் பேசிய ஜெயம் ரவி, “பாக்சிங்கில் மொத்தம் ஆறு நிலைகள் தான் இருக்கின்றன. இந்தப்படத்திற்காக பாக்சிங் பயிற்சியாளரான மதனிடம் இரண்டு மாதங்கள் பயிற்சி எடுத்தேன். 15 கிலோ உடல் உடையை கூட்டினேன். அதிலும் மயானக்கொள்ளையில் நடித்த அனுபவம் மறக்க முடியாதது. இந்தப்படத்தின் ஒவ்வொரு பிரேமிலும் பிரம்மாண்டம் வெளிப்படும். அந்த அளவுக்கு செலவு பண்ணி பிரமாண்டம் காட்டியிருக்கிறார் இயக்குனர் கல்யாண கிருஷ்ணன்.

ஒரு அறிமுக இயக்குனர் தானே என அலட்சியம் காட்டாமல் நம்பிக்கையுடன் அவர் கேட்ட பிரமாண்டத்திற்காக காசை அள்ளி இறைத்திருக்கிறார் தயாரிப்பாளர் ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன்.. நிச்சயம் அதற்கான பலன் இந்தப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் கிடைக்கும்” என்றார் உணர்ச்சிப்பெருக்குடன்.
 
 

Comments