அடுத்த சூப்பர்ஸ்டார் விவகாரம்: தீவிர ஆலோசனையில்அஜீத் ரசிகர்கள்?!!!

1st of July 2014
சென்னை:கடந்த சில நாட்களுக்கு தமிழ் வார இதழ் முன்பு, ‘”அடுத்த சூப்பர் ஸ்டார் யார்?” என்ற கருத்துக் கணிப்பை நடத்தியது. இந்தக் கருத்துக் கணிப்பை நடத்தியபோது, ஒவ்வொரு நாளும் நடிகர் அஜித்தான் வாசகர்களிடம் இருந்து அதிக வாக்குகளை பெற்றிருந்ததாகவும், கடைசி நாள் வரை நடிகர் அஜித் மட்டுமே அடுத்த சூப்பர் ஸ்டார் கருத்துக் கணிப்பில் முன்னிலை வகித்ததாகவும் தகவல்கள் வெளியாயின.
 
இதற்கான ஆதாரத்தை கருத்துக் கணிப்பு நடத்திய நபர்களில் ஒருவர் பகிரங்கமாக வெளியிட்டதாகவும் தகவல் சமூக வலைத்தள ஊடகங்களில் கசிந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் வேகமாகப் பரவி சர்ச்சையை ஏற்படுத்திய இந்த விவகாரம் கருத்துக் கணிப்பு வெளிட்ட இதழுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
ரஜினி ரசிகர்களுடன் சேர்ந்து அஜித் ரசிகர்களும் இந்தச் செயலுக்கு கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இதன் பின்னர் என்ன நடந்தது என தகவல் ஏதும் வெளியாகாத நிலையில், நடிகர் விஜய்க்கு கொடுத்த அடுத்த சூப்பர் ஸ்டார் படத்தை திரும்பப் பெறலாமா என அந்த வார இதழ் நிர்வாகம் யோசித்து வருவதாக இன்னொரு தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் விஜய் தரப்பு கடும் அதிர்ச்சியில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
 
இந்நிலையில் இன்று சென்னையில் ஆறு மாவட்டங்களைச் சேர்ந்த முன்னாள் அஜீத் மன்றத் தலைவர்கள் கூடிப் பேசியதாகவும், கருத்துக் கணிப்பு வெளியிட்ட வார இதழுக்கு தங்கள் கண்டனத்தை மாநில அளவில் ஒன்று சேர்ந்து தெரிவிக்க வேண்டும் என்றும்
தேவைப்பட்டால் நீதிமன்ற நடவடிக்கை எடுக்கவும் ஆலோசிக்கலாம் என்றும் முடிவு எடுக்கப்பட்டதாக சமூக வலைத் தளங்களில் செய்திகள் பரவிவருகின்றன.. இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியாவிட்டாலும் கோலிவுட் வட்டாரம் இந்த
நிகழ்வுகளால் பெரும் பரபரப்படைந்துள்ளது மட்டும் உண்மை.
 
அடுத்த சூப்பர் ஸ்டார்” பட்டம் யாருக்கு என்பதில் அஜீத், விஜய் இருவருமே ஆர்வம் காட்டாமல் அவரவர் தங்கள் படப்பிடிப்புகளில் பிஸியாக இருக்கும் நிலையில், அவர்களது ரசிகர்கள் ஏன் தேவையில்லாத இத்தகைய வேலைகளில் ஈடுபட்டுள்ளனர் என்று பொதுவான கருத்து உள்ளவர்கள் அதே சமூக வலைத்தளங்களில் தங்கள் எண்ணங்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

Comments