மனைவி, பிள்ளைகளுடன் இன்று பிறந்த நாள் கொண்டாடும் சூர்யா...ரசிகர்கள் கொண்டாட்டம்!!!

23rd of July 2014
சென்னை:தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். 

பிறந்த நாளையொட்டி, அவரது ரசிகர்கள் ரத்த தானம் உள்ளிட்ட பல்வேறு நலத் திட்ட உதவிகளைச் செய்து வருகின்றனர்.
1997-ம் ஆண்டு நேருக்கு நேர் என்ற படத்தில் இயக்குநர் வசந்தால் அறிமுகப்படுத்தப்பட்டவர் சரவணன் என்கிற சூர்யா. நடிகர் சிவகுமாரின் மூத்த மகன்.

நேருக்கு நேர் படத்துக்குப் பிறகு, சூர்யா நடித்து வெளியான சில படங்கள் அவ்வளவாகப் போகவில்லை. காதலே நிம்மதி, சந்திப்போமா, பெரியண்ணா, பூவெல்லாம் கேட்டுப்பார், உயிரிலே கலந்தது போன்ற படங்கள் வெளியான காலகட்டம் சூர்யாவுக்கு போராட்ட காலமாக இருந்தது. 

அவர் நடிக்க வந்து 17 ஆண்டுகள் ஆகின்றன. முப்பத்து ஒன்பது வயதான சூர்யா இதுவரை நடித்துள்ள படங்கள் 35 (அஞ்சானுடன்).
 
ப்ரெண்ட்ஸ் படம் சூர்யா தன்னை திரையுலகில் தக்க வைத்துக் கொள்ள உதவியது என்றால், அடுத்து வந்த நந்தா அவரை தனித்துவம் மிக்க நாயகனாக நிலைநிறுத்தியது. அதன் பிறகு சூர்யாவின் நடிப்பு வாழ்க்கையில் ஏறுமுகம்தான்.
 
இன்று சூர்யா தனது 35வது படமாக அஞ்சான் நடித்து முடித்துள்ளார். அடுத்து அவர் நடிக்கும் படம் மாஸ் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. காதல், ஆக்ஷன், சென்டிமென்ட் என அனைத்து ஏரியாவிலும் புகுந்து விளையாடும் நவரச நடிகராக சூர்யா இன்று பிரமாண்ட உருவம் எடுத்து நிற்கிறார்.
 
அவரது பிறந்த நாள் கொண்டாட்டம் ஒரு நாள் முன்னதாக நேற்றே ஆரம்பமாகிவிட்டது. பல ஆயிரம் ரசிகர்கள் தமிழகம் முழுவதும் அவர் பிறந்த நாளைச் சொல்லி, ரத்த தானமும் உடல் உறுப்பு தானமும் செய்தனர். இன்றும் நலத்திட்ட உதவிகள் தொடர்கின்றன.
 
இன்னொரு பக்கம், நேற்று சத்யம் அரங்கில் நடந்த அஞ்சான் பட இசை வெளியீட்டு விழாவிலேயே சூர்யாவின் பிறந்த நாளையும் கொண்டாடினர் படக் குழுவினரும், திரையுலகினரும். சூர்யாவுக்கு ஆளுயர பிறந்த நாள் மாலையை அணிவிக்கப்பட்டு, பிறந்த நாள் கேக்கும் மேடையிலேயே வெட்டப்பட்டது.
 
இன்று தன் மனைவி ஜோதிகா, பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினருடன் பிறந்த நாள் கொண்டாடுகிறார் சூர்யா.
 
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் சூர்யா!

Comments