வேலையில்லா பட்டதாரி’ படத்திற்கு மிகப்பெரிய ஓபனிங்கும்: சந்தோஷத்தில் தனுஷ், லிங்குசாமி!!!

22nd of July 2014
சென்னை:ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கோடம்பாக்கத்திற்கு பரீட்சை நடக்கும் நாள். தங்களின் படைப்புகளை ரசிகர்களின் பார்வைக்கு வைத்துவிட்டு நகம் கடிக்க காத்திருப்பார்கள் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும், நடிகர்களும். அந்த வகையில்  வெள்ளிக்கிழமை (ஜூலை 18) வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ், அமலாபால் நடித்திருக்கும் ‘வேலையில்லா பட்டதாரி’, ‘திருப்பதி பிரதர்ஸ்’ லிங்குசாமி வெளியீட்டில் ‘சதுரங்க வேட்டை’, கே.எம்.சரவணன் இயக்கத்தில் ‘இருக்கு ஆனா இல்ல’ என மூன்று தமிழ் படங்கள் வெளியாகி உள்ளன.

‘வேலையில்லா பட்டதாரி’ படத்திற்கு மிகப்பெரிய ஓபனிங்கும், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளதால் தனுஷும், அறிமுக இயக்குனர் வேல்ராஜும் சந்தோஷத்தில் மிதந்து கொண்டிருக்கின்றனர். இப்படத்திற்கு தமிழகம் முழுவதும் ஏ,பி.சி என மூன்று சென்டர்களிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், ‘படிக்காதவன்’, ‘திருவிளையாடல் ஆரம்பம்’, ‘யாரடி நீ மோகினி’ போல் பெரிய வெற்றி கிடைக்கும் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
 
அதேபோல் எந்தவித பெரிய நடிகர் பட்டாளமும் இல்லாமல், கதையையும் தங்களது திறமையையும் நம்பிக் களமிறங்கியிருக்கிறது ‘சதுரங்க வேட்டை’ டீம். அவர்களின் நம்பிக்கைக்கு கைமேல் பலன் கிடைத்திருக்கிறது. படம் வெளிவருவதற்கு முன்பே பத்திரிகையாளர் காட்சியில் மிகப்பெரிய பாராட்டுக்களை வாங்கிய இப்படம் தற்போது ரசிகர்களிடத்திலும் நல்ல விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக இப்படத்தை ‘திருப்பதி பிரதர்ஸ்’ நிறுவனம் வாங்கி வெளியிட்டதும் இப்படத்திற்கு இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் கிடைத்திருக்கிறது. இப்படத்தின் இயக்குனர் வினோத், படத்தின் தயாரிப்பாளர் மனோபாலா உட்பட மொத்த ‘சதுரங்க வேட்டை’ டீமிற்கும் கோடம்பாக்கத்திலிருந்து வாழ்த்துகள் குவிந்து கொண்டிருக்கின்றன.

ஒரே நேரத்தில் வெளியான மூன்று படங்களில் இரண்டு படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் விநியோகஸ்தர்களும், தியேட்டர் ஓனர்களும் கூட மகிழ்ச்சியில் உள்ளனர். இதேபோன்ற ஆரோக்கியமான சூழ்நிலை வரும் வாரங்களிலும் தமிழ் சினிமாவிற்கு அமையட்டும்

Comments