வைரமுத்து எழுதிய பாடலை எந்த காலத்திலும் இளையராஜா பாடமாட்டார்: இளையராஜாவின் ஒப்புதலுடன் அவரது பேன்ஸ் கிளப் அதிகாரப்பூர்வ பக்கத்தில் செய்தி!!!

27th of July 2014
சென்னை:1977ல் பாரதிராஜா இயக்கிய முதல் படம் 16 வயதினிலே, அதையடுத்து கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள், நிறம் மாறாத பூக்கள் படங்களையடுத்து 1980ல் அவர் இயக்கிய படம்தான் நிழல்கள். இந்த படத்தில்தான் இளையராஜாவின் இசையில் கவிஞர் வைரமுத்து பொன்மாலைப்பொழுது என்ற பாடலை எழுதி அறிமுகமானார். இளையராஜாவுக்கு அது 97வது படமாகும்.
 
அதையடுத்து, இளையராஜாவின் இசையில் நிறைய பாடல்கள் எழுதினார். ஆனால் ஒரு கட்டத்தில், அவர்களது நட்பில் உரசல் ஏற்பட்டது. அதன்பின்னர் இளையராஜாவின் இசையில் வைரமுத்து பாடல்கள் எழுதவில்லை. இந்த நிலையில், சீனுராமசாமி இயக்கும் இடம் பொருள் ஏவல் படத்தில் இளையராஜாவின் இளைய மகன் யுவன் ஷங்கர் ராஜா இசையில் வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார்.
 
இந்த நிலையில், அந்த படத்தில் வைரமுத்து எழுதியுள்ள ஒரு பாடலை இளையராஜா பின்னணி பாடப்போவதாக கோலிவுட்டில் கடந்த சில வாரங்களாக செய்தி பரவி வந்தது. ஆனால் தற்போது அது முற்றிலும் தவறான செய்தி என்று இளையராஜாவின் ஒப்புதலுடன் அவரது பேன்ஸ் கிளப் அதிகாரப்பூர்வ பக்கத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
 
அந்த மறுப்பு செய்தி விவரம் வருமாறு- வைரமுத்து எழுதிய பாடலை எந்த காலத்திலும் இளையராஜா பாடமாட்டார். தனது படத்துக்கு விளம்பரம் கருதி சீனுராமசாமி இப்படியொரு செய்தியை பரப்பி விட்டுள்ளார் என்று குறிப்பிட்டுள்ளனர்.
 
மேலும், இயக்குனர் பாலா தனது தாரை தப்பட்டை படத்தில் எப்படியேனும் இளையராஜா இசையில் வைரமுத்துவை பாடல் எழுத வைத்து விட வேண்டும் என்று முயற்சி எடுத்தார். ஆனால், அப்படியொரு ஆசை இருந்தால் வேறு யாரையாவது வைத்து இசையமைத்துக்கொள் என்று பாலாவிடம் இளையராஜா உறுதியாக சொல்லிவிட்டார். அதன்பிறகே வைரமுத்துவை பாடல் எழுத வைக்கும் முயற்சியை தவிர்த்தார் பாலா.
 
அதையடுத்துதான் இப்போது இப்படியொரு செய்தியை சீனுராமசாமி பரப்பி விட்டுள்ளார். ஆக, இளையராஜா அவருக்கு பாடல் எழுதும் வாய்ப்பைக்கொடுக்க நேரடியாக மறுத்து விட்டதால்,. இப்படி யுவன் படத்தின் மூலமாக அதாவது கொள்ளை புறம் வழியாக நுழைய முயற்சித்துள்ளார் வைரமுத்து என்பதை ரசிகர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறோம்.
 
முக்கியமாக, வாழ்க்கை கொடுத்தவருக்கு எதிராகவே பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் வைரமுத்துவின் பாடலை இளையராஜா பாடுகிறார் என்று வெளியான செய்தியை நம்புவதற்கு இளையராஜாவின் ரசிகர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல என்றும் இளையராஜா பேன்ஸ் கிளப் சார்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

Comments