திரை விமர்சனம்: சதுரங்க வேட்டை!!!

19th of July 2014
சென்னை:பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் செய்திகளாக நாம் அறிந்த விஷயங்களை வைத்துக்கொண்டு, விறுவிறுப்பான திரைகதையோடு, சுவாரஸ்யமான காட்சிகளின் மூலம் இந்த ’சதுரங்க வேட்டை’ உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த உலகத்தில் எளிய முறையில் பணம் சம்பாதிக்கும் நாயகன் நட்டி, தன்னைப் போலவே எளிய முறையில் பணம் சம்பாதிக்கும் ஆசைக்கொண்டவர்களை ஏமாற்றி எப்படி பணம் சம்பாதிக்கிறார். அதன் மூலம் அவருக்கு ஏற்படும் பிரச்சனைகளும் அதில் இருந்து அவர் விடுபட்டாரா இல்லையா என்பது தான் கதை சுருக்கம்.


மருத்துவ குணம் கொண்ட மண் பாம்பின் மூலம் கோடிகளை சம்பாதிக்கலாம் என்ற ஆசையைக் காட்டி, மளிகைக் கடைக்காரர் இளவர்சுவிடம் இருந்து பல லட்சங்களை ஆட்டையைப் போடும் நட்டி, எம்.எல்.எம் என்ற நிறுவனத்தின் மூலம் பாத்ரூம் குழாயில் பிடிக்கப்பட்ட தண்ணீரை, ஒரு பாட்டிலில் அடைத்து மூலிகை தண்ணீர் என்று விற்பனை செய்வது மட்டும் இன்றி, அந்த நிறுவனத்தில் பலரை இணைத்து பல லட்சங்களை சுவாகா செய்ய, அப்பாவி பெண்ணா நாயகி இஷாரா, அதே நிறுவனத்தில் வேலைக்கு சேருகிறார். நட்டியைப் பற்றி தெரியாத இஷாரா, நட்டியிடம் தனக்கு தெரிந்த அனாதை குழந்தைகள் காப்பகத்திற்கு உதவுமாறு கூறுகிறார். அதற்கு சம்மதம் தெரிவித்து அனாதை குழந்தைகள் காப்பகத்திற்கு உதவும் நட்டி, அந்த உதவியையும் தனது ஏமாற்று வேலைக்குப் பயன்படுத்திக் கொள்கிறார். இதனை அறியாத இஷாரா நட்டியை ஒரு தலையாக காதலிக்க தொடங்குகிறார். ஒரு கட்டத்தில் நட்டியின் நிறுவனத்தின் மீது சிலருக்கு சந்தேகம் வர அங்கிருந்து பணத்தை சுருட்டிக்கொண்டு எஸ்கேப் ஆகும் போது, தான் ஏன் இப்படி மற்றவர்களை ஏமாற்றுகிறேன் என்பதற்கு ஒரு குட்டி கதையை இஷாராவிடம் சொல்லிவிட்டு விடை பெறுகிறார்.

இப்படி பல்வேறு வகையில் பலரிடம் பல மோசடிகளின் மூலம் பணத்தை ஆட்டையைப் போடும் நட்டி போலீஸிடம் சிக்குகிறார்.

போலீஸ் எவ்வளவோ சித்திரவதை செய்தும், தன்னிடம் உள்ள பணம் எங்கே என்பதை சொல்ல மறுக்கும் நட்டி, இந்த உலகத்தில் பணம் தான் அனைத்தும் என்றும், அந்த பணம் தன்னை காக்கும் என்றும் காவல் துறை அதிகாரியான பொன்வன்னனிடம் எகத்தாலும் பேசுகிறார். அவர் பேச்சுக்கு ஏற்றவாறே, சட்டத்தின் ஒட்டைகளில் பணத்தைக் கொண்டு அடைத்துவிட்டு, நட்டி விடுதலையாகிறார். போலீஸ் விட்டாலும் அவரால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் அவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக அடியாட்களை வைத்து நட்டியை கடத்துகிறார். அப்படி கடத்தப்படும் நட்டியை ரவுடிகள் கொலை செய்ய முயற்சிக்க, உயிருக்கு பயந்து பணத்தை திருப்பிக் கொடுப்பதாக நட்டி கூறுகிறார். தனது கூட்டாளிகளிடம் சொல்லி அனைத்து பணத்தையும் எடுத்துவரச் சொல்லும் நட்டிக்கு, அவர்கள் பெரிய நாமத்தைப் போட்டுவிட்டு பணத்தை அவர்கள் எடுத்துச் சென்றுவிடுகிறார்கள்.

இதனால் என்ன செய்வதென்று அறியாமல் முழிக்கும் நட்டி, தன்னை கடத்தச் சொன்னவரை கொலை செய்தால், தான் அடுத்ததாக செய்யப் போகும் 100 கோடி ரூபாய்க்கான வேலையை செய்து முடித்து அதில் பாதியை தருவதாக கூலிப்படையிடம் சொல்கிறார். நட்டியின் பேச்சைக் கேட்ட கூலிப்படை தலைவன், நட்டி சொன்னது போல செய்ய, ஒரு கட்டத்தில் அந்த கூலிப்படை தலைவனையும், அவனின் ஆட்களையும் தனது தந்திரத்தினால் போலீஸிடம் சிக்க வைத்துவிட்டு நட்டி எஸ்கேப் ஆக, அவர்களிடம் இருந்து தப்பிக்கும் நட்டி, அவரால் ஏமாற்றப்பட்ட பலரால் துரத்தப்பட, அதில் சிலர் அவரை அடித்து துவைக்க, உயிர் பயத்தில் எங்கு போவதென்று தெரியாமல் தவிக்கும் நட்டி இஷாராவை சந்திக்கிறார், அவருக்கு மருத்துவ உதவி செய்து அவரை உயிர் பிழைக்க வைக்கிறார் இஷாரா.

தான் செய்த தவறை உணர்ந்து உழைத்து வாழ வேண்டும் என்று நினைக்கும் நட்டி, இஷாராவை திருமணம் செய்துக்கொண்டு கிராமம் ஒன்றில் உள்ள தனது நண்பரின் நிலத்தில் விவசாயம் செய்துக்கொண்டு வாழ்ந்துக் கொண்டிருக்கிறார். இஷாரா கர்ப்பமாகிறார். இந்த நிலையில் நட்டியால் பாதிக்கப்பட்ட கூலிப்படை நட்டியை சுற்றி வளைத்து இஷாராவையும், நட்டியையும் கொலை செய்ய முடிவு செய்கிறது. அவர்களிடம் இருந்து தப்பிக்க அப்போது சொன்ன அந்த 100 கோடி வேலையை தற்போது செய்துகொடுப்பதாக நட்டி அவர்களிடம் கூறி, இஷாராவை காப்பாற்றுவதுடன், அந்த 100 கோடி வேலைக்கான பணியிலும் ஈடுபடுகிறார். அப்படி ஈடுபடும் அவர் அந்த வேலை செய்தாரா? அது என்ன வேலை? என்பது தான் க்ளைமாக்ஸ்.

படம் ஆரம்பித்த 10வது நிமிடத்தில் ஜெட் வேகத்தில் பறக்கிறது. நாம் தினசரி செய்திகளில் அறிந்த சம்பவங்களையும், அதன் பின்னணியில் என்ன நடந்திருக்கும் என்ற கற்பனையையும் வைத்துக்கொண்டு இயக்குநர் வினோத் அருமையாக திரைக்கதை அமைத்திருக்கிறார்.

நட்டி, இதற்கு முன்பு சில படங்களில் நடித்திருந்தாலும், அவருடைய திறமையை முழுவதுமாக காட்டியுள்ளது இந்த படம். இந்த கதாபாத்திரத்தை நட்டியை விட்டால் வேறு யாரும் செய்திருக்க முடியாது, என்று சொல்லக் கூடிய அளவுக்கு சின்ன சின்ன ரியாக்‌ஷன்களிலும் மனுஷன் அசத்துகிறார். ஒவ்வொரு ஏமாற்று வேலைகளின் போதும் தனது நடிப்பில் சிறு மாற்றத்தைக் காண்பித்துள்ள நட்டி, வில்லத்தனமான கதாபாத்திரமாக இருந்தாலும், தனது நடிப்பால் அதை ரசிக்க வைத்திருக்கிறார்.

நாயகி இஷாராவுக்கு பெரிய அளவில் நடிக்க கூடிய வாய்ப்பு இல்லை என்றாலும், தனது அப்பாவித்தனமான கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு அளவாக நடித்துள்ளார்.

வில்லனாக நடித்துள்ள வலவன், நட்டியின் நண்பராக நடித்துள்ள தரணி, இளவரசு என அனைத்து நடிகர்களும் தங்களது கதாபாத்திரத்திற்கு பலம் சேர்க்கும் அளவுக்கு நடித்துள்ளார்கள்.

பாடல்களே தேவையில்லாத திரைக்கதையாக இருந்தாலும், கடமைக்காக இரண்டு பாடல்களைக் கொடுத்துள்ள இசையமைப்பாளர் சீன் ரோலண்ட், பாடல்களில் சுமராக பணியாற்றியிருந்தாலும், பின்னணி இசையில் தன்னை நிரூபித்துள்ளார். கே.ஜி.வெங்கடேஷின் ஒளிப்பதிவு திரைக்கதையின் வேகத்திற்கு ஈடுகொடுத்துள்ளது. படம் முழுவதும் வேகமாக பயணிப்பதால் படத்தொகுப்பாளர் ராஜ செதுபதி ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார். அறிமுகப் படம் என்பது தெரியாதவாறு படத்தின் வேகத்திற்கு தனது கத்திரியை சிறப்பாகவே பயன்படுத்தியிருக்கிறார்.

இடைவேளையின் போதே நட்டியின் ஆட்டம் முடிந்தாலும், அதன் பிறகும் படத்தின் மீது உள்ள சுவாரஸ்யம் குறையாமல் ரசிகர்களை சீட் நுணியில் அமர வைக்கும் அளவுக்கு திரைக்கதை அமைத்த இயக்குநர் வினோத்துக்கு ஆயிரம் அப்ளாஸ் கொடுக்கலாம்.

படம் முடியும் வரை அடுத்தது என்ன நடக்கும் என்ற எதிர்ப்பார்பை ரசிகர்களிடம் குறையாத வகையில், காட்சிகளில் ரொம்ப கவனம் செலுத்தியிருக்கும் இயக்குநர் பிளாஸ் பேக் என்ற ஒரு விஷயத்தைக் கூட, நடராஜியின் கதாபாத்திர தன்மையைப் போலவே வேகமாக சொல்லி முடிப்பது சபாஷ் போட வைக்கிறது.

தற்போது தமிழகம் முழுவதிலும் ஆங்காங்கே நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஏமாற்று வேலைகளை மையமாக வைத்து இப்படத்தை உருவாக்கியுள்ள வினோத், சத்தமில்லாமல் நமது மக்களை காப்பாற்றிக் கொள்வதற்காக ஒரு எச்சரிக்கையாகவும் இப்படத்தை எடுத்துள்ளார் என்று கூறும் அளவுக்கு படத்தில் உள்ள காட்சிகள் எதார்த்தத்தை மீறாமல் உள்ளது.

Comments