நடிகர் ராஜேஷ் கண்ணா பங்களா ரூ.90 கோடிக்கு விற்பனை!!!

27th of July 2014
சென்னை:பாலிவுட் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்த ராஜேஷ் கண்ணாவின் பங்களா ரூ. 90 கோடிக்கு விற்கப்பட்டது. இதை ஒரு தொழிலதிபர் வாங்கியிருக்கிறார்.
இந்தி திரையுலகில் சூப்பர் ஸ்டாராக கொடிகட்டி பறந்தவர் ராஜேஷ்கண்ணா. இவருக்கு மும்பையில் ஒரு கார்ட்டர் சாலையில் ஒரு பெரிய பங்களா உள்ளது. கடலை நோக்கி அமைந்திருக்கும் சொகுசு பங்களாவான இதை பார்க்க ஏராளமான மக்கள் வருவதுண்டு. இதை 1960ம் ஆண்டு வாக்கில் பிரபல இந்தி நடிகரான ராஜேந்திர குமாரிடம் இருந்து ராஜேஷ் கண்ணா வாங்கி உள்ளார். 80களில் இதில் மராமத்து பணிகளை செய்து இதற்கு ஆசிர்வாத் என்று பெயர் சூட்டியிருந்தார்.

ராஜேஷ்கண்ணாவுக்கு டுவிங்கிள், ரின்கி என்ற 2 மகள்கள் உள்ளனர். மகன் யாரும் கிடையாது. மகள்களிடம் ஏராளமான சொத்துக்கள் உள்ளன. கண்ணா உயிருடன் இருந்த போது அவருடன் துணைவியார் அனிதா அத்வானி, அந்த பங்களாவில் வசித்து வந்தார். தற்போது அந்த பங்களாவை கண்ணாவின் மகள்கள், பிரபலமான தொழிலதிபர் சசிகிரண் ஷெட்டி என்பவருக்கு விற்று விட்டனர். மொத்தம் 603 சதுர மீட்டர் பரப்பில் அமைந்துள்ள இந்த பங்களாவின் தற்போதைய மதிப்பு ரூ. 90 கோடி இருக்கும் என்றும் அந்த விலைக்குத்தான் ஷெட்டி வாங்கினார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆனால் இது குறித்து கேட்ட போது, ஷெட்டி பதிலளிக்க மறுத்து விட்டார். அவர் மும்பை நகருக்குள் சுமார் ரூ. 100 கோடி மதிப்பில் பங்களா ஒன்றை வாங்குவதற்காக கடந்த 2 ஆண்டுகளாக தேடி வந்தார் என்றும் தற்போது கண்ணாவின் பங்களாவை அவர் வாங்கி இருக்கிறார் என்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர். ராஜேஷ்கண்ணா உயிருடன் இருந்த போது தனது பங்களாவை சினிமா அருங்காட்சியமாக மாற்ற விரும்பியதாகவும் எனினும் இது பற்றி பின்னாளில் எனது மகள்கள் முடிவு செய்வார்கள் என்றும் அவர் கூறியதாகவும் செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் கண்ணாவின் பங்களாவை அவரது விருப்பப்படி அருங்காட்சியகமாக மாற்ற வேண்டுமென அவரது துணைவியார் அனிதா அத்வானி கூறியுள்ளார். ஆனால் அதை கண்ணாவின் மகள்கள் ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments