20 ஆண்டுகளாக இசைத்துறையில் புரிந்து வரும் சாதனைகளை பாராட்டி ஏ.ஆர்.ரகுமானுக்கு அமெரிக்காவின் கவுரவ டாக்டர் பட்டம்!!!

18th of July 2014
சென்னை:இசைத்துறையில் கடந்த 20 ஆண்டுகளாக  சாதனை புரிந்து வரும் ஏ.ஆர்.ரகுமானுக்கு  அமெரிக்காவின் ப்ரிக்லீ இசைக் கல்லூரி, கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவிக்க உள்ளது.
 
அக்டோபர் 24ம் தேதி ப்ரிக்லீ இசைக் கல்லூரியில் நடைபெறும் ரகுமானுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளது. இந்த விழாவில், சமீப காலமாக ஏ.ஆர்.ரகுமானுக்கு அதிக புகழையும் கவுரவத்தையும் தேடித் தந்த ஸ்லம்டாக் மில்லினர், 127 ஹார்ஸ், எலிசபெத்: தி கோல்டன் ஏஜ், மில்லியன் டாலர் ஆம் ஆகிய படங்களில் இடம்பெற்றுள்ள ரகுமானின் இசை தொகுப்பு ஒலிபரப்பப்பட உள்ளது.
 
தனக்கு டாக்டர் பட்டம் கிடைத்துள்ளது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஏ.ஆர்.ரகுமான், இசை உலகிற்கு ஏராளமான பங்களிப்பை தந்துள்ள இத்தகைய சிறப்பான இசைக் கல்லூரியிடம் இருந்து கவுரவ டாக்டர் பெறுவதை மிகப் பெரிய கவுரவமாக நினைக்கிறேன். அதிலும், வருங்காலத்தில் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் இசை உலகில் அவர்களின் கனவுகளை அடைவதற்கு என் பெயரில் ஸ்காலர்ஷிப் வழங்க அக்கல்லூரி நிர்வாகம் முடிவு செய்திருப்பது எனக்க கிடைத்துள்ள மிகப் பெரிய கவுரவமாகவும், பெருமையாகவும் நினைக்கிறேன். 
பிரிக்லீ இசைக்கல்லூரி நிர்வாகி ரோஜர் ஹச் ப்ரவுன் கூறுகையில், எனது இந்திய நண்பர்களான ஜான் வில்லியம்சும் ஸ்டிங்கும் தான் ஏ.ஆர்.ரகுமான் பற்றி என்னிடம் கூறினர். அதனாலேயே உலக அளவில் புகழ்பெற்ற, திறமையான ஒரு பாடலாசிரியர், இசையமைப்பாளர், பாடகரை எங்கள் கல்லூரிக்கு அழைத்து கவுரவிக்க வேண்டும் என முடிவு செய்தோம்.
 
போஸ்டன் நகரில் நடைபெறும் இவ்விழாவில் இசைக்கல்லூரி மாணவர்கள், ஏ.ஆர்.ரகுமானின் இசையில் உருவான தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்களை பாடியும் மாணவர்கள் அவரை வரவேற்க உள்ளனர். இவ்விழாவில் மாணவர்களுக்கு, ஏ.ஆர்.ரகுமான் இசை வகுப்பும் நடத்த உள்ளார். இந்த விழாவின் மூலம் கிடைக்கும் தொகை அனைத்தையும் ஏ.ஆர்.ரகுமான் பெயரில் வழங்கப்பட உள்ள ஸ்காலர்ஷிப் நிதிக்காக பயன்படுத்த உள்ளனர்.

Comments