என்னோட பிள்ளைகள் சோறு சாப்பிடுதுனா, அதுக்குக் காரணம் வடிவேலு அய்யாதான்: வெங்கல்ராவ்!!!

20th of June 2014
சென்னை:காமெடியன்கள் எல்லாம் கதாநாயகன்கள் ஆகும் காலம் இது. இன்னொரு புறம் டி.வி ஷோக்கள் மூலமாக தமிழ் சினிமாவில் காமெடியனாக என்ட்ரி கொடுப்பவர்களும் உண்டு. ஆனால் ஒரு ஸ்டன்ட் நடிகராக சினிமாவில் வாழ்க்கையைத் தொடங்கி காமெடியனாக மாறியவர் வெங்கல்ராவ். ஆந்திராவைப் பூர்வீகமாகக்கொண்ட இவரது கதையே வெகு சுவாரஸ்யம்.
'
ஆந்திரா மாநிலம் விஜயவாடா பக்கத்தில் இருக்கிற ஒரு சின்ன கிராமம்தான் சொந்த ஊர். எனக்கு அஞ்சு வயசு இருக்கும். எங்க அப்பா இறந்துட்டார். கூடப்பிறந்தவங்க  நாலு பேரு. அம்மா கூலி வேலைக்குப் போய்தான் எங்களுக்கு சோறு போடும். அதனால நானும் அப்பவே ஒரு ரூபா, ரெண்டு ரூபா சம்பளத்துக்கு வேலைக்குப் போவேன். இடைப்பட்ட நேரத்தில் கொம்பு சுத்துறது, சண்டையெல்லாம் கத்துக்கிட்டேன்.
 
ஒருதடவை எங்கம்மா, 'டேய் நீ நெறையத் திங்கிற. உனக்கு என்னால சாப்பாடு போட முடியல. எங்கேயாச்சும் வேலைக்குப் போடா’னு சொல்லுச்சு. அப்போ நாங்க இருந்த இடத்தில் நிறைய ஷூட்டிங் நடக்கும். நாம ஏன் இங்க சேரக் கூடாது. சேர்ந்தா நல்ல சாப்பாடு கிடைக்கும், காசு கிடைக்கும்னு தோணுச்சு. அந்த ஆர்வத்தில் சென்னைக்கு வந்தேன்.
 
இத்தனைக்கும் அப்போ எனக்கு கொம்பு சுத்துறது, குதிரை ஓட்டுறது, ஃபைட் பண்றது எல்லாம் தெரிஞ்சும் நான் அலைஞ்சேன். அந்தக் காலத்தில் ரிசர்வேஷன் இல்லாத நேரத்தில் எத்தனையோ நாள் ட்ரெயின்ல விஜயவாடாவில் இருந்து சென்னைக்கு வந்துருக்கேன். இதுக்கிடையில எனக்குக் கல்யாணம் ஆகிடுச்சு. அப்பவும் என் பொண்டாட்டிக்குத் தெரியாம சென்னைக்கு வந்து போயிட்டுதான் இருந்தேன். ஒருதடவை அவ, 'சினிமா எதுக்கும் ஆகாது. இனி நீ சென்னைக்குப் போனா, நான் எங்க அப்பா வீட்டுக்குப் போயிடுவேன்’ னு சொல்லிக் கிளம்பிட்டா. என்னோட எட்டு வருஷப் போராட்டத்துக்குப் பின்னாடி ஒரு நாள் 'நாளை டெஸ்ட் இருக்கு வந்துடு. அதுல நீ பாஸாகிட்டா உனக்கு கார்டு’னு சொன்னாங்க. அடுத்த மூணு நாள் டெஸ்ட்ல பாஸாகி கார்டு வாங்கினேன். 25 வயசுல சினிமாக்கு வந்தேன். இப்போ எனக்கு வயசு 60.
 
தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி, தெலுங்கு, ஒடிசா, பெங்காலினு எல்லா மொழிகள்லேயும் எத்தனையோ ஹீரோகிட்ட சண்டை போட்டிருக்கேன். அவங்களுக்கு டூப்பும் போட்டிருக்கேன். இப்போ முதுகுல ரெண்டு எலும்பு போய், ரெண்டு முட்டியும் தேஞ்சு... இப்போ சண்டைக்குப் போறதில்ல.
 
ஃபைட்டரா ரொம்ப நாள் இருக்க முடியலை. சரி மூட்டை முடிச்சைக் கட்டிடலாம்னு கிளம்பிட்டேன். கடைசியா வடிவேலு அண்ணாகிட்ட 'என்னால ஃபைட் பண்ண முடியல. உங்ககூட சேர்ந்து ஏதாவது காமெடிக்கு வரேன்’னு கேட்டேன். இன்னைக்கு என்னோட பிள்ளைகள் சோறு சாப்பிடுதுனா, அதுக்குக் காரணம் வடிவேலு அய்யாதான். எனக்கு குல தெய்வமுன்னா, அது வடிவேலுதான்.''

Comments