மெட்ராஸ்’ கார்த்திக்கு இன்னொரு ‘பருத்திவீரன்’!!!

21st of June 2014
சென்னை:கிராமம் சார்ந்த மண்ணின் மைந்தர்களை மட்டும் தான் சினிமாவில் யதார்த்தமாக நடமாட விடமுடியுமா? ஏன் நகரத்தில் அதுவும் சென்னையில் குறிப்பாக வடசென்னையில் நகரத்துடன் பின்னிப்பிணைந்த மனிதர்களை அவர்களைன் இயல்பு வாழ்க்கையை திரையில் அப்படியே காட்ட முடியாதா?
முடியும் என்று கார்த்தியை வைத்து தான் இயக்கியுள்ள ‘மெட்ராஸ்’ படம் மூலமாக முயன்று காட்டியுள்ளார் இயக்குனர் ‘அட்டகத்தி’ ரஞ்சித். எப்படி மதுரை மண்ணின் மைந்தனாக, முரட்டு போக்கிரியாக கார்த்தி நடித்த ‘பருத்திவீரன்’ படத்தில் அவர் ஏற்ற பாத்திரம் இன்றளவும் பேசப்படுகிறதோ. அதே கார்த்தி சென்னை மண்ணின் மைந்தனாக நடித்துள்ள இந்த ‘மெட்ராஸ்’ படமும் அவருக்கு ஒரு மைல் கல்லாக அமையப்போகிறது.
 
சரி ‘மெட்ராஸ்’ படம் பற்றி ரஞ்சித் என்ன சொல்கிறார் “அசல் சென்னை என்பது வட சென்னைப் பகுதிதான் ஆனால் இந்த வடசென்னை என்பதை தமிழ்சினிமா இதுவரை வன்முறை பகுதியாகவும், இருட்டுப் பிரதேசமாகவும் மட்டுமே சித்தரித்து வந்துள்ளன.. இது தவறானது. இந்தத் தவறான பிரச்சாரத்தால் அங்குள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அங்கு ஏடிஎம் கூட வைக்கப் படுவதில்லை. வடசென்னைப் பகுதியின் பெயரைச் சென்னையில் காவல் நிலையங்களில் தனியான ‘தாக்குதல்’ உண்டு. ஆனால் அப்பகுதி மக்கள் அப்பாவிகள். அனைவரையும் இப்படி முத்திரை குத்துவது தவறு.
 
ஆனால் வடசென்னை மக்களின் வாழ்வியலை உணமையாக சொல்கிற படம் தான் ‘மெட்ராஸ்’. அவர்களின் வாழ்க்கையை, கொண்டாட்டத்தை அரசியலை சொல்கிற இயல்பான பதிவாகத்தான்  ‘மெட்ராஸ் படமும் இருக்கும். சொல்லப்போனால் வடசென்னை சமூகத்தின் பாசாங்கற்ற ரத்தமும் சதையுமான பதிவாக “மெட்ராஸ்” இருக்கும். வடசென்னையில் வாழும் ஒரு இளைஞனாகவே கார்த்தி வாழ்ந்து இருக்கிறார். எந்த இடத்திலும் அவர் தனித்து வெளிப்படமாட்டார்”  என்கிறார்  ரஞ்சித்.
 
முதலில் இந்தக்கதை பற்றிய கருத்து கேட்கவே இதன் திரைக்கதையை கார்த்தியிடம் கொடுத்துள்ளார் ரஞ்சித். ஆனால் படிக்க படிக்க கதைக்குள் இறங்கிய கார்த்தி,  தானே இதில் நடிப்பதாக விரும்பியிருக்கிறார்.  ஐடி படித்த இளைஞராக கார்த்தி நடித்துள்ளார். சென்னையில் வளர்ந்த கார்த்திக்கு சென்னை மொழி ஏற்கனவே அறிமுகமானது என்பதால் பேசி நடிக்கும் போது அவருக்கு எந்த சிரமமும் ஏற்படவில்லை.
இதில் நாயகியாக நடித்துள்ள தெலுங்கு நடிகையான கேத்தரின் தெரசாவுக்கும் தமிழும் சென்னைத் தமிழும் பயிற்சியளிக்கப்பட்டுள்ளது.. காளியாக கார்த்தி, கலையரசியாக கேத்தரின் என நாயகன், நாயகி தவிர மற்றவர்கள் பெரும்பாலும் பரிச்சயமில்லாத முகங்களே. படத்தின் இயல்பு கெட்டுவிடக்கூடாது என்று பெரும்பாலும் புதியவர்களே நடிக்க வைக்கப் பட்டுள்ளார்.
 
பாசாங்கு சினிமாவின் நிறமோ பளபளப்பு கூட்டும் தரமோ வந்து விடாதபடி இயல்புத்தன்மையுடன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார் அறிமுக ஒளிப்பதிவாளர் முரளி.ஜி. இவர் புனே திரைப்படக்கல்லூரி மாணவர், குறும்படத்துக்காக தேசிய விருது பெற்றவர். படத்துக்கு இசையமைத்துள்ளார் சந்தோஷ் நாராயணன்.
 
வடசென்னை மக்களின் வாழ்வியல் பதிவான “மெட்ராஸ்” ஜூலையில் ரிலீஸாக இருக்கிறது. ஆகவே ஒரு புதிய மண்வாசனை அனுபவத்துத் தயாராக இருங்கள்.

Comments