17th of June 2014
சென்னை:சமூக ஆர்வலர்களும், மருத்துவர்களும், சில அரசியல்வாதிகளும் என்ன
சொன்னாலும் சில திரைப்பட நடிகர்கள் கேட்பதேயில்லை. சமீப காலத்தில் தமிழ்
சினிமாவில் குடிக்கிற காட்சிகளும், புகை பிடிக்கும் காட்சிகளும் இடம்
பெறுவது அதிகமாகிவிட்டது. படம் சென்சார் ஆகும் போது, அப்படிப்பட்ட
காட்சிகளில் எச்சரிக்கை வாசகங்கள் இடம் பெற்றாலும் கூட இன்னும் சில
இயக்குனர்கள் இம்மாதிரியான காட்சிகளை படங்களில் வைக்கவே செய்கிறார்கள்.
இம்மாதிரியான காட்சிகளில் ஒரு சில நடிகர்கள் மட்டுமே நடிப்பதில்லை. ஆனால்,
தேசிய விருது பெற்ற தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ்
நேற்று வெளியிட்ட அவருடைய பட விளம்பரம் ஒன்றில் ஸ்டைலாக புகை பிடிப்பது
போன்ற போஸ்டரைத்தான் வெளியிட்டுள்ளார்.
இதற்கு முன் அவர் நடித்து வெளிவந்த 'மரியான்' திரைப்பட வெளியீட்டின் போது கூட பீடி பிடிப்பது போன்ற புகைப்படங்கள் விளம்பரங்களில் இடம் பெற்றன. அதன் பின் பலத்த எதிர்ப்பால் அப்படிப்பட்ட புகைப்படங்கள் இடம் பெறுவதை தவிர்த்தனர். தற்போது தனுஷ் 'வேலையில்லா பட்டதாரி' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கான போஸ்டர் ஒன்றை 'ரசிகர்களுக்காக' என்று டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அதில்தான் சிகரெட் பிடிப்பது போன்ற ஸ்டைலான தோற்றத்தில் அவர் இருப்பது போன்ற புகைப்படம் இடம் பெற்றுள்ளது.
ரஜினிகாந்த், அஜித், விஜய் போன்ற நடிகர்கள் புகை பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை தவிர்த்து வரும் சூழ்நிலையில் தனுஷ் மீண்டும் இம்மாதிரியான ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமூக ஆர்வலர்களும், பெற்றோர்களும் இம்மாதிரியான புகைப்படங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இனி, வரும் காலங்களில் இம்மாதிரியான திரைப்படங்களில் புகைப்படங்கள் வெளியிடுவதற்கும் சட்ட திட்டங்களை கடுமையாக்க வேண்டும் என்று அவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
Comments
Post a Comment