21st of June 2014
சென்னை::பிரபல இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத் அமெரிக்காவிலும், கனடாவிலும் மிகப் பிரமாண்டமான இசை நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளார். வரும் ஜூலை 13-ம் தேதி சாஞ்சோஸிலும், ஆகஸ்ட்-9-ம் தேதி கனடாவின் டோரண்டோவிலும் இந்த இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
மிகப் பெரிய அரங்குகளைத் தேர்வு செய்து மிக நேர்த்தியான முறையில் இந்த இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. செவிகளுக்கான இசை விருந்தான நிகழ்ச்சியாக மட்டுமன்றி, கண்ணைக் கவரும் வண்ணமய நடன நிகழ்ச்சிகளும் இதில் அரங்கேறவுள்ளன. பல பிரபல பின்னணி பாடகர்கள், பாடகிகள் மேடையில் பாடுவதோடு இல்லாமல் ஆடவும் செய்து ரசிகர்களை மகிழ்விக்கப் போகின்றனராம்.
இந்நிகழ்ச்சியின் கூடுதல் பொலிவாக அமெரிக்க இசைக் கலைஞர்கள் நமது பாடல்களுக்கு இசையமைக்கப் போவதோடு, அமெரிக்க நடனப் பெண்கள் நமது பாடல்களுக்கு நடனமாடவும் இருக்கிறார்களாம்.. இந்நிகழ்ச்சிக்கான உடை அலங்காரத்தை அம்ரிதாவும், நடனப் பயிற்சியை ராம்ஜியும் மேற்கொள்கின்றனர்.
இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத் இந்த நிகழ்ச்சிக்காக பிரத்யேகமாக பிரமோஷனல் பாடல் ஒன்றை உருவாக்கியுள்ளார். இப்பாடலின் சிறப்பம்சம் யாதெனில் மற்ற விளம்பரப் பாடல்கள் போலில்லாமல், முதல்முறையாக இசை நிகழ்ச்சியின் முழு விபரங்களையும் பாடலுக்காக எழுதும் எழுத்து வடிவில் உருமாற்றி, அதற்கென அழகாய் ஒரு மெட்டமைத்து ஒரு வீடியோவாக உருவாக்கியுள்ளார்.
இந்த விளம்பரப் பாடலை இளைய தளபதி விஜய் வெளியிட்டு பெருமைப்படுத்தினார். புதுமையான முறையில் பாடலாக்கப்பட்டுள்ள இதனை கேட்டு விஜய் இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத்தை வெகுவாகப் பாராட்டியுள்ளார். ஷூட்டிங் பிஸிகளுக்கிடையே இதற்கென நேரம் ஒதுக்கி வருகை தந்த இளைய தளபதி விஜய்யை மனதாரப் பாராட்டி நன்றி தெரிவித்துக் கொண்டார் தேவிஸ்ரீபிரசாத்.
Comments
Post a Comment