15th of June 2014
உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் களமிறங்கும் நட்சத்திர வீரர்களை வாழ்த்தி ரஜினியின் பஞ்ச் டயலாக்குகளுடன் கேரள மாநிலம் குமுளியில் ரசிகர்கள் மலையாள பேனர்களை வைத்து அசத்துகின்றனர்.
உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களின் எதிர்பார்ப்பான 20வது உலகக்கோப்பை கால்பந்து திருவிழா பிரேசில் நாட்டில் சாவ் போலோ நகரில் (இந்திய நேரப்படி) நள்ளிரவு 11.30 மணிக்கு கோலாகலமாகத் துவங்கியது.
ஜூலை 13 வரை நடக்கும் இந்தப் போட்டிகள், உலகின் பல நாடுகளில் அன்றாட அலுவல்களை முடக்கிப் போடுகிற அளவுக்கு ரசிகர்களை கட்டிப் போட்டு வைத்திருக்கும்.இந்தியாவைப் பொறுத்தவரை, கேரளாவில் கால்பந்து ரசிகர்கள் அதிகம். கிரிக்கெட்டை விடவும் கால்பந்துப் போட்டிகளை ஆராதிக்கிற ரசிகர்களுக்கு கேரளாவில் பஞ்சமில்லை. இவர்கள் அனைவரும் தங்களது அபிமான அணி, வீரர்களின் ஆட்டத்திறனைக் காண படு ஆர்வமாக தயாராகி விட்டனர்.
புதிதாக ரிலீஸ் ஆகும் சினிமாவுக்கு தயாராவது போல, நட்சத்திர வீரர்கள், அணிகளை வாழ்த்தி பிரமாண்ட கட் அவுட், பேனர்கள் வைத்து அசத்துகின்றனர். தேனி மாவட்ட எல்லையில் உள்ள குமுளி கால்பந்தாட்ட கிளப்பில் அர்ஜென்டினா மற்றும் பிரேசில் அணிக்கு கூடுதல் ரசிகர்கள் உள்ளனர். இவர்கள் தங்கள் அபிமான அணியை வாழ்த்தியும், எதிரணியினரை கிண்டல் செய்தும் குமுளி நகர் முழுவதும் மலையாள மொழியில் பிளக்ஸ் போர்டுகள் வைத்துள்ளனர்.எதிரணி வீரர்களை கிண்டல் செய்வதற்கு இவர்கள் ரஜினி படங்களில் வரும் பஞ்ச் டயலாக்குகளை கையாண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. குமுளி பஸ் ஸ்டாண்டில் பிரேசில் அணி ரசிகர்கள் சார்பாக வைக்கப்பட்டுள்ள
பேனரில், பிரேசில் நட்சத்திர வீரர்களின் படமும், அவர்களுடன் பிரேசில் அணியின் டி&சர்ட் அணிந்த ரஜினிகாந்தின் படமும், அவர் மாற்று அணியைப் பா£த்து பஞ்ச் டயலாக் பேசுவது போல் மலையாளத்தில் அச்சிடப்பட்டுள்ளது. அதில், கண்ணா இதெல்லாம் சும்மா.... ஜூஜூபி, இது ட்ரைலர்மா... மெயின்பிக்சர் இன்னு நீ பாக்கல... தாங்காது... என எழுதி வைத்துள்ளனர். பஸ் ஸ்டாண்டில் வித்தியாசமாக வைக்கப்பட்டுள்ள இந்த பேனரை கால்பந்து ரசிகர்கள் மட்டுமின்றி பொதுமக்களும், தேக்கடி சுற்றுலாப்பயணிகளும் கண்டு ரசித்து செல்கின்றனர்.
Comments
Post a Comment