தங்கை வேடத்தில் நடிக்கிறார் கார்த்திகா!!!

20th of June 2014
சென்னை:கோ’ படத்தின் மூலம் ராதாவின் மகள் என்ற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும் ‘அந்தப்படத்தின் வெற்றி கார்த்திகாவிற்கு தனி அடையாளத்தைக் கொடுத்தது. அதன்பின்பு இயக்குனர் பாரதிராஜாவின் ‘அன்னக்கொடி’ பட வாய்ப்புக் கிடைத்தாலும் தமிழ்சினிமாவில் தன் கொடியை உயர பறக்கவிட கார்த்திகாவால் முடியவில்லை.
 
இன்னொருபக்கம் அதிர்ஷ்ட தேவதை அவரை முற்றிலும் கைவிடவில்லை என்பதற்கு அடையாளமாக எஸ்.பி.ஜனநாதன் இயக்கிவரும் ‘புறம்போக்கு’ படத்தில் ஆர்யா, விஜய்சேதுபதியுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நல்ல பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்த கார்த்திகா, தன்னை தேடி வந்த இந்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக்கொண்டுள்ளார்.
 
இது தவிர தற்போது தெலுங்கில் அல்லரி நரேஷுடன் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் கார்த்திகா. ஆனால் அவருக்கு ஜோடியாக அல்ல.. தங்கையாக.. நரேஷுக்கு ஜோடியாக நடிப்பது மோனல் கஜ்ஜார். கார்த்திகாவுக்கு வில்லனை காதலிக்கும் வேடமாம். ‘தம்மு’ படத்தை தொடர்ந்து தெலுங்கில் இவர் நடிக்கும் இரண்டாவது படம் இது.

Comments