மெட்ராஸ் கஃபே நடிகை, தபாங் வில்லன் - சாஹசத்துக்கு தயாராகும் பிரசாந்த்!!!

15th of June 2014
சென்னை:பிரசாந்த் அறிமுகமான வைகாசி பொறந்தாச்சு வெள்ளிவிழா படம். அதன் பிறகு ஆ.கே.செல்வமணி, பாலுமகேந்திரா, மணிரத்னம், ஷங்கர் என்று முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடித்தார். வேறு எந்த நடிகருக்கும் இப்படியொரு வாய்ப்பு அமைந்ததில்லை.

பிரசாந்தின் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட சிக்கல்கள் அவரது சினிமா கரியரின் சுக்கானை திருப்பிவிட்டது. இடையில் நடித்த மம்பட்டியானும், பொன்னர் சங்கரும் கை கொடுக்காத நிலையில் உடம்பை இளைத்து புதுப்பொலிவுடன் சாஹசம் படத்தில் நடித்து வருகிறார்.
 
பிரசாந்தின் தந்தை தியாகராஜன் ஸ்டார் மூவிஸ் சார்பில் சாஹசத்தை தயாரிக்கிறார். பிரமாண்டமாக தயாராகும் இப்படத்தின் கணசமான பகுதிகள் படமாக்கப்பட்டுவிட்டன. ஆனால் இன்னும் நாயகி யார் என்பது தீர்மானமாகவில்லை. படத்தில் பிரசாந்தின் தந்தையாக நாசரும், தாயாக துளசியும், தங்கையாக லீமாவும் நடிக்கின்றனர். இவர்கள் தவிர எம்.எஸ்.பாஸ்கா, தம்பி ராமையா, கோட்டா சீனிவாசராவ் ஆகியோரும் இருக்கிறார்கள்.

ஒரு பாடலுக்கு ஆடுவதற்கு மெட்ராஸ் கஃபேயில் நடித்த நர்கிஸ் பக்ரியை ஒப்பந்தம் செய்திருக்கிறார் தியாகராஜன். நர்கிஸ் பக்ரி தற்போது ஸ்பை என்ற ஆங்கிலப் படத்தில் நடித்து வருகிறார். சாஹசத்தில் நர்கிஸுடன் பிரசாந்தும் பாடலுக்கு ஆடுகிறார். அதற்காக சென்னையில் பிரமாண்ட அரங்கு அமைக்க உள்ளனர்.

தபாங்கில் வில்லனாக நடித்த சோனு சூட் சாஹசத்தில் வில்லனாக நடிக்கிறார். சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்ய, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் சாஹசம் படத்தை அருண்ராஜ் வர்மா இயக்கி வருகிறார்.

Comments