பிரதமர் மோடியுடன் பாலிவுட் நடிகர் ஆமீர்கான் சந்திப்பு!!!

24th of June 2014
சென்னை: பிரதமர் நரேந்திர மோடியை மிகக் கடுமையாக விமர்சித்த பாலிவுட் நடிகர் ஆமீர்கான் நேற்று அவரை நேரில் சந்தித்துப் பேசினார்.
 
குஜராத்தின் நர்மதா அணை கட்டுமானத்தை மிகக் கடுமையாக எதிர்த்தவர் நடிகர் ஆமீர்கான். நர்மதா அணை கட்டுமானத்தை எதிர்த்து மேதா பட்கர் நடத்தும் போராட்டத்தில் இணைந்து பங்கேற்றவர். அப்போதைய நரேந்திர மோடி தலைமையிலான குஜராத் அரசையும் ஆமீர்கான் கடுமையாக விமர்சித்திருந்தார்.
 
இதற்காகவே ஆமீர்கான் இயக்கி நடித்த தாரே ஜாமீன் பர் திரைப்படம் வெளியான போது குஜராத்தில் பெரும் எதிர்ப்பை எதிர்கொண்டார். குஜராத்தின் வதோதராவில் சர்தார் படேல் குழுவினர் ஆமீர்கானின் படத்தை திரையிட எதிர்ப்பு தெரிவித்து போராட்டமே நடத்தினர்.
 
இந்த நிலையில் திடீரென பிரதமர் மோடியை ஆமீர் கான் சந்தித்துப் பேசியுள்ளார். டெல்லி சவுத் ப்ளாக்கில் பிரதமர் அலுவலகத்தில் மோடியை ஆமீர்கான் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments