16th of June 2014
மலையாள சினிமா சரித்திரத்தில் அதிகம் வசூல் செய்த த்ரிஷ்யம் சென்ற டிசம்பரில் வெளியானது. மோகன்லால், மீனா நடித்திருந்த இந்தப் படத்தை ஜீத்து ஜோசப் இயக்கியிருந்தார். கேரளா மட்டுமின்றி திரையிட்ட அனைத்து இடங்களிலும் படம் தறிகெட்டு ஓடியது. 100 நாள்களை அனாயாசமாக கடந்த சமீபத்திய படம் என்றால் அது த்ரிஷ்யம்தான்.
சரித்திர வெற்றி பெற்ற த்ரிஷ்யத்தை சாதாரணமாக ஓவர்டேக் செய்திருக்கிறது பெங்களூர் டேய்ஸ் திரைப்படம். பகத் பாசில், அவரின் வருங்கால மனைவி நஸ்ரியா நசீம், துல்கர் சல்மான், நிவின் பாலி, நித்யா மேனன், இஷா தல்வார், பார்வதி மேனன் என்று மலையாள சினிமாவின் முன்னணி இளம் நட்சத்திரங்கள் அனைவரும் பெங்களூர் டேய்ஸில் நடித்திருந்தனர். இயக்கம் அஞ்சலி மேனன்.
கேரளாவின் கோழிக்கோடைச் சேர்ந்த அஞ்சலி மேனன் துல்கர் சல்மான் நித்யா மேனன், திலகன் நடித்த உஸ்தாத் ஹோட்டலின் திரைக்கதையை எழுதி மலையாள சினிமாவில் அறிமுகமானார். உஸ்தாத் ஹோட்டல் ஹிட். அதனை இயக்கியவர் அன்வர் ரஷீத்.
அதன் பிறகு மஞ்சாடிக்குரு என்ற படத்தை அஞ்சலி மேனன் இயக்கினார். அப்படம் விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. இயக்குனராக அவரது இரண்டாவது படம்தான் பெங்களூர் டேய்ஸ். படத்தின் கதையும், கச்சிதமான திரைக்கதையும், காட்சி அமைப்பும், அஞ்சலி மேனனின் திரைமொழியும் பார்வையாளர்களை வசியப்படுத்தியுள்ளது. இளைஞர்களாலும், குடும்ப ரசிகர்களாலும் பெங்களூர் டேய்ஸ் திரைப்படும் ஓடும் திரையரங்குகள் நிரம்பி வழிகின்றன. கேரளாவில் 98 திரையரங்குகளில் வெளியான படம் முதல் வாரத்தில் பத்து கோடிகளை வசூலித்துள்ளது. இதுவொரு சரித்திர சாதனை.
மலையாள சினிமா எத்தனையோ வெற்றிகளைப் பார்த்திருந்தாலும் இது அவற்றையெல்லாம் தாண்டியது என்கிறார்கள் திரையரங்கு உரிமையாளர்கள். மேலும், ரசிகர்களையும், விமர்சகர்களையும் ஒருசேர கவர்ந்திழுக்கும் பெண் இயக்குனர் என்றால் இன்றைய தேதியில் அஞ்சலி மேனன் ஒருவர்தான். அவருக்கு முன்பும் இதுபோல் ஒரு வெற்றிப் படத்தை யாரும் தந்ததில்லை. இந்தப் படத்தை தயாரித்தவர் அஞ்சலி மேனனின் திரைக்கதையில் உருவான உஸ்தாத் ஹேய்ட்டலை இயக்கிய அன்வர் ரஷீத்.
கேரளாவைப் பொறுத்தவரை அஞ்சலி மேனன்... ராக்ஸ்.
Comments
Post a Comment