என்னை அன்பாக பார்த்துக் கொள்பவராக இருந்தால் திருமணம் செய்வேன்: ஐதராபாத்தில் நயன்தாரா பேட்டி!!!

30th of June 2014
சென்னை:நயன்தாரா தமிழில் ‘இது நம்ம ஆளு’, ‘தனி ஒருவன்’, நண்பேன்டா’ படங்களில் பிசியாக நடிக்கிறார். ‘நைட்ஷோ’ என்ற பேய் படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார். ஐதராபாத்தில் நயன்தாரா பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:–

கேள்வி:– உங்களுக்கு பிடித்த நடிகர் யார்?

பதில்:– மலையாளத்தில் மோகன்லாலையும், தமிழில் ரஜினியையும் எனக்கு பிடிக்கும். தெலுங்கில் பிடித்த நடிகர் வெங்கடேஷ்.

கே:– நடிக்க வராமல் இருந்திருந்தால் என்னவாகி இருப்பீர்கள்?

ப:– நடிகையாகாமல் இருந்திருந்தால் நடன கலைஞராகவோ அல்லது சார்ட்டட் அக்கவுண்டன்ட் ஆகவோ ஆகி இருப்பேன்.


கே:– உங்கள் ‘பெட்நேம்’ என்ன?

ப:– சிலர் மணி என்று அழைப்பார்கள். இன்னும் சிலர் நயன் என்று கூப்பிடுவார்கள். ‘டயானா’ என்றும் அழைப்பது உண்டு.

கே:– ஓய்வு நேரத்தில் என்ன செய்வீர்கள்?

ப:– பாடல்கள் கேட்பேன். நீண்ட தூரம் காரில் பயணம் செய்வதும் பிடிக்கும். ஆங்கில படங்கள் பார்ப்பேன்.

கே:– பிடித்த உணவுகள்?

ப:– வடஇந்திய உணவுகளை விரும்பி சாப்பிடுவேன். ‘சைனீஸ்’ உணவுகளும் பிடிக்கும். வீட்டில் அம்மா சமைக்கும் எல்லா உணவுகளும் பிடிக்கும்.

கே:– பிடித்த நிறம்?

ப:– கறுப்பு, வெள்ளை, இலை பச்சை நிறங்கள்.

கே:– பிடித்த ‘பேஷன்’

ப:– சிம்பிளான டிரெஸ் அணிவதுதான் எனக்கு பிடிக்கும். ஆனால் பளிச்சென்று இருக்க வேண்டும். பத்து பேருடனோ அல்லது நூறு பேருடனோ இருந்தால் கூட நான் மட்டும் தனியா தெரிய வேண்டும் என்று நினைப்பேன்.

கே:– பிடித்த நகை?

ப:– பிளாட்டினத்தில் செய்த நகைகளை பிடிக்கும்.

கே:– திருப்புமுனை படங்கள் எவை?

ப:– சினிமாவுக்கு வந்த புதிதில் என்னை ‘கிளாமர்’ நடிகையாகத்தான் பார்த்தார்கள். ரஜினியுடன் சந்திரமுகியில் நடித்த பிறகு அந்த ‘இமேஜ்’ மாறியது. நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் படமாக அது அமைந்தது. தெலுங்கில் லட்சுமி, ஸ்ரீராமராஜ்ஜியம் படங்கள் எனக்கு திருப்பு முனையை ஏற்படுத்தின. எந்த கேரக்டர் என்றாலும் என்னால் நடிக்க முடியும் என்பதை ஸ்ரீராமராஜ்ஜியத்தில் நான் நடித்த சீதை கேரக்டர் நிரூபித்தது.

கே:– பிடித்த உடைகள்?

ப:– புடவை அணிவது பிடிக்கும். சல்வார் கமீஸ், குர்தி ஆடைகளும் பிடித்தமானவை.

கே:– பிடித்த இடங்கள்?

ப:– பெங்களூர், கனடா மற்றும் ஐரோப்பாவில் உள்ள அனைத்து நகரங்களும்.

கே:– அடுத்தவரிடம், பிடிக்காத குணம்?

ப:– கோபம், உண்மையாக இல்லாமல் இருப்பது முதிர்ச்சி இல்லாமல் நடந்து கொள்வது.

கே:– வருங்கால கணவர் எப்படி இருக்க வேண்டும்.

ப:– என்னை கவுரவமாக நடத்த வேண்டும். எனது குடும்பத்தினருக்கு முக்கியத்துவம் கொடுப்பவராக இருக்க வேண்டும். என்னை அன்பாக பார்த்துக் கொள்பவராகவும் எனக்கு மதிப்பு கொடுப்பவராகவும் இருக்க வேண்டும்.

கே:– சினிமா வாழ்க்கையில் கற்றுக் கொண்ட பாடம் என்ன?

ப:– எவ்வளவு கஷ்டம் வந்தாலும் தன்னம்பிக்கையை இழக்க கூடாது. தோல்விகள் எவ்வளவு வந்தாலும் அதற்காக கவலைப்படக் கூடாது. எத்தனை கஷ்டம் வந்தாலும் விழுந்து எழும் கடல் அலை மாதிரி எழ வேண்டும். தெரியாத விஷயங்கள் பற்றி வாய் திறக்க கூடாது.

இவ்வாறு நயன்தாரா கூறினார்.

Comments