ஷங்கர் இயக்கத்தில் எந்திரன் படத்தின் இரண்டாம் பாகத்தை ரிலையன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக தகவல்!!!

18th of June 2014.
சென்னை:இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்து மாபெரும் வெற்றி பெற்ற எந்திரன் படத்தின் இரண்டாம் பாகத்தை ரிலையன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.
 
2010-ஆம் ஆண்டு சன் பிக்சர்ஸ் தயாரித்து, ஷங்கர் இயக்கி ரஜினிகாந்த் நடித்த எந்திரன் திரைப்படம் வெளியாகி வசூல் சாதனை படைத்தது. விமர்சகர்களாலும், ரசிகர்களாலும் பாராட்டப்பட்ட இத்திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராய் கதாநாயகியாக நடிக்க, ஏ.ஆர். ரகுமான் இசையமைத்திருந்தார்.
 
தமிழ் திரைப்பட வரலாற்றில் ஒரு சிறந்த சைன்ஸ் ஃபிக்‌ஷன் படமாகக் கருதப்படும் எந்திரன், கிராபிக்ஸ் காட்சிகளுக்காக தேசிய விருதைப் பெற்றது. வெளிநாட்டிலிருந்த பல கிராபிக்ஸ் ஆர்வலர்களும், எந்திரன் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளை ரசித்துப் பாராட்டியிருந்தனர். எந்திரன் படம் முடியும் போது, அதன் முக்கியக் கதாபாத்திரமான சிட்டி ரோபோ இன்னும் செயல்பட்டுக் கொண்டிருப்பதைப் போலவே இயக்குனர் ஷங்கர் முடித்திருந்தார்.
 
இதைத் தொடர்ந்து எந்திரன் படத்தின் இரண்டாம் பாகம் எப்போதும் தொடங்கப்படலாம் என அவ்வபோது பேச்சுகள் எழுந்தாலும் எதுவும் உறுதியாகவில்லை. ஏ.ஜி.எஸ் நிறுவனமும் ஷங்கர்-ரஜினி இணையை வைத்து எந்திரன் 2 வேலையை துவங்கத் திட்டமிருந்தனர். ஆனால் பட்ஜெட் பிரச்சனைகளால் இம்முயற்சி கைவிடப்பட்டது. இந்நிலையில் எந்திரனின் இரண்டாம் பாகத்தை ரிலையன்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஷங்கர் இயக்கத்தில் மீண்டும் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.
 
லிங்கா திரைப்படத்தை அடுத்து ரஜினியும், ஐ திரைப்படத்தைத் தொடர்ந்து ஷங்கரும் எந்திரன் 2 வேலைகளைத் தொடங்குவார்கள் எனத் தெரிகிறது.

Comments