மீண்டும் சூர்யாவுடன் சேருவேன்!: இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன்!!!

13th of June 2014
சென்னை:இளம் தலைமுறையின் காதல், பாசம், நேசம், வலி முதலானவற்றைப் படமாக்குவர்களில் ஒருவர் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன். அஜித், அனுஷ்கா நடிப்பில் தயாராகிவரும் படத்தின் படப்பிடிப்புக்காக மலேசியா புறப்பட்டுக்கொண்டிருந்த ஒரு பொழுதில் நடந்த உற்சாக உரையாடலிலிருந்து…
 
ஒரே நேரத்தில் அஜித் படம், சிம்பு படம் என இரண்டிலும் கவனம் செலுத்திவருகிறீர்களே?
 
நீ தானே என் பொன் வசந்தம்’ படத்திற்கு முன் ‘விண்ணைத் தாண்டி வருவாயா’, ‘நடுநிசி நாய்கள்’ ஆகிய இரண்டு படங்களுக்கும் இதேபோலத்தான் படப்பிடிப்பு இருந்தது. இம்முறை அப்படித் திட்டமிட்டு இறங்கவில்லை. சிம்பு என்னோட நெருங்கிய நண்பர். சூர்யா படம் டிரா ஆன நேரத்தில் சிம்புகிட்ட கேட்டேன். அன்று இரவே ஷூட்டிங் போகலாம் என்றார். உடனே தொடங்கினோம். ஆரம்பித்து 15 நாட்களில் ரத்னம் சாருக்கு ஒரு படம் பண்ணலாமா என்று அஜித் சார்கிட்ட இருந்து அழைப்பு வந்தது. அந்த நேரம் சிம்புவும் பாண்டிராஜ் படத்தில் நடித்துக்கொண்டிருந்ததால் இரண்டு படங்களையும் நகர்த்திக் கொண்டுபோக வாய்ப்புக் கிடைத்தது.
அஜித்துடன் முதல் படம் அனுபவம் பற்றி?
 
பெரிய ஹீரோக்களோடு வேலை பார்க்கும்போது ஒரு விதப் பயம் இருக்கும். கமல் சாரோட வேலை பார்த்தபோது பயம் கலந்த மரியாதை இருந்தது. அஜித் சார் பெரிய ஹீரோ. என் தயக்கத்தை முதல் நாள் படப்பிடிப்பிலேயே நொறுக்கித் தள்ளிவிட்டார். அவ்வளவு நட்பாகப் பழகும் மனிதர். படப்பிடிப்புத் தளத்தில் நல்ல அட்மாஸ்ஃபியரை உருவாக்குபவர். ஷூட் முடிக்க முடிக்க அவரிடம் போட்டுக் காட்டுவேன். ‘என்னோட நல்ல படங்களின் வரிசையில் இதுவும் இருக்கும்’ என்று ஒரு தடவை சொன்னார். ரொம்ப சந்தோஷமாக இருந்தது.
 
30 நாட்கள் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் தலைப்பு வைப்பதில் இன்னும் எதற்கு சஸ்பென்ஸ்?
 
சிம்பு படத்திற்கு ‘சட்டென்று மாறுது வானிலை’ என்ற தலைப்பைத் திட்டமிட்டிருந்தோம். பிறகுதான் அது வேறொரு படத்திற்கு வைக்கப்பட்டுச் சென்சார் வரைக்கும் வந்துவிட்டது என்பதே தெரிந்தது. அது ஈர்த்த மாதிரி ஒரு தலைப்பு அமையட்டும் என்று காத்திருக்கிறோம். அஜித் சாரோட படத்துக்கு நாங்கள் சில தலைப்புகள் சொல்லியிருக்கோம். தயாரிப்பு தரப்பில் இருந்தும் சில தலைப்புகளை ஆலோசித்து வருகிறார்கள். விரைவில் அறிவிப்பு வரும்.
 
உங்க வாழ்க்கையில் நடந்த சம்பவங்களின் பாதிப்பு உங்கள் படங்களில் வெளிப்படுமே?
 
சிம்பு படத்தில் நிறைய இடங்களில் என்னோட இளமை பருவத்தோட பாதிப்பு உண்டு. அஜித் சார் படத்தில் அதுக்கான வாய்ப்பு இல்லை. அஜித் சார் படம் ஒரு கேரக்டர் பத்தின ஸ்டடி. இந்த கேரக்டரோட அடுத்தடுத்த கட்டத்தைப் படமாக்க வேண்டும் என்றே இருக்கிறேன். அந்தக் கதாபாத்திரத்தோட வேலை அடுத்தடுத்த கட்டங்களையும் தொடும். ஒரு குறிப்பிட்ட வயது தொடங்கி, குறிப்பிட்ட ஸ்டேஜ்வரை போகும். அடுத்தடுத்த பார்ட் உருவாக்கும் நோக்கத்தில் எழுதியிருக்கிறேன். அடுத்தடுத்த பாகங்களிலும் அஜித் சாரை வைத்து இயக்குவேன்.
 
சிம்பு இயக்குநர்களின் அலைவரிசைக்குள் எளிதில் சிக்குவதில்லை என்கிறார்களே?
 
எனக்கு அப்படித் தோணியதே இல்லை. காலை 7 மணிக்குச் சுறுசுறுப்பாகப் படப்பிடிப்பில் கலந்துகொள்ள வந்துவிடுவார். கொஞ்சம் தாமதமாக வந்தாலும்கூட ஒண்ணு அல்லது ரெண்டு டேக்குகளில் ஓகே செய்துவிடுவார். அவர் தமிழ் சினிமாவின் ரன்பீர் கபூர். நல்ல நடிகர்.
 
உங்களோட கனவு படம்?
 
‘துப்பறியும் ஆனந்த்’ என்ற ஒரு பீரியட் கதை இருக்கு. அதை எடுப்பதற்கான நேரம் வரணும். மற்றபடி கனவுப்படம் என்றெல்லாம் எதுவுமில்லை. கமல் சாரை வைத்துப் படம் எடுத்துவிட்டேன். ரஜினி சார், கமல் சார் இருவரையும் வைத்து எடுக்க நினைப்பதை வேண்டுமானால் ட்ரீம் பிலிம் என்று சொல்வேன்.
தலைப்பு, பாடல்கள், காதல் காட்சிகள் இவற்றைப் பார்க்கும்போது இந்தத் தலைமுறைக்கான ஸ்ரீதர் என்று உங்களைச் சொல்லலாமா?
இந்த ஒப்பீடு என்னை நெகிழ வைக்கிறது. நான் மட்டும் இந்த வேலையைத் தொடர்கிறேன் என்று சொல்ல முடியாது. லிங்குசாமி, சசிகுமார், சமுத்திரக்கனி உள்ளிட்ட பல இயக்குநர்கள் வித்தியாசமான முயற்சியில் இறங்குகிறார்கள். இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் புதிய முயற்சிகளைத் தொடுகிறார்கள். அதுபோன்ற முயற்சியில் நானும் இருக்கிறேன்.
 
உங்கள் படத்தில் மட்டும் நாயகி கூடுதல் அழகாகத் தெரிய என்ன காரணம்?
 
பெண்கள் எனக்கு எப்படித் தெரிகிறார்களோ அப்படித்தான் படங்களிலும் இருக்க வேண்டுமென விரும்புகிறேன். அவங்களோட கதாபாத்திரத்தை வடிவமைக்கும் விதம், ஆடைகள் வரைக்கும் நான் தேர்வு செய்கிற எல்லாமே என் வாழ்க்கையில் நான் சந்தித்த, சந்திக்கும் பெண்களோட பாதிப்புதான். அந்த மாதிரிதான் பெண்களைச் சினிமாவில் காட்ட வேண்டும் என்று நினைத்துச் செய்கிறேன். இதுவரைக்கும் ஒரு தப்பான பெண் கதாபாத்திரத்தைக் காட்டியதே இல்லை. இன்னும் நிறைய பெண் கதாபாத்திரங்கள் எழுத வேண்டும்.
 
மீண்டும் சூர்யாவுடன் இணைவீர்களா?
 
அவர்கூட வேலை பார்க்கக் கூடாது என்பதெல்லாம் இல்லை. அவரும், நானும் இணைவதற்கான கதையும், சூழலும் உருவாகும்போது நிச்சயம் இணைவேன். இயக்குநர்களுக்கு ஹீரோ நிச்சயம் வேண்டும். புதுமுகங் களை வைத்து ஒரு குறிப்பிட்ட லெவல் கதை, பெரிய பட்ஜெட் இதெல்லாம் முடியாது. என்னிடம் இப்போது உள்ள 3, 4 கதைகளிலும் பெரிய ஹீரோக்களால் மட்டுமே நடிக்க முடியும். சூர்யா எந்த போகஸ்ல இருக்கார், அவரோட பேட்டன் எப்படி என்பது எனக்கு இன்னும் புரியவில்லை. எனக்குத் தெரியும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். அது தெரியவில்லையோ என்று எண்ணத் தோன்றுகிறது. எப்போ இந்த மாதிரி திரைக்கதைதான் அவருக்கு வேண்டும் என்று தோணுகிறதோ அப்போது நான் அவருடன் சேருவேன்.

Comments