11th of June 2014
சென்னை:பிரபல திரைப்பட ஒளிப்பதிவாளர் அசோக்குமார் (72) உடல் நலக்குறைவு காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் செவ்வாய்க்கிழமை அனுமதிக்கப்பட்டார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் 80-க்கும் அதிகமான திரைப் படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் அசோக்குமார்.
ஜென்மபூமி என்ற படத்தின் மூலம் 1969ம் ஆண்டு ஒளிப்பதிவாளராக அறிமுகமானார் அசோக்குமார். மகேந்திரன் இயக்கிய ’உதிரிப்பூக்கள்’, ’ஜானி’,நண்டு, கை கொடுக்கும் கை, நெஞ்சத்தை கிள்ளாதே படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார். நெஞ்சத்தை கிள்ளாதே படத்திற்காக தேசிய விருது பெற்றார்.
உல்லாச பறவைகள், காளி,கன்னிராசி, நடிகன், சூரியன், மன்னன்,ஷங்கரின் இயக்கத்தில் வெளிவந்த "ஜீன்ஸ்' உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்களின் கவனம் பெற்றார். டேல்ஸ் ஆப் காமசூத்திரா, கேத்தா ஹை தில் பார் பார் என்ற படங்களை இயக்கினார். அவர் கடைசியாக ஒளிப்பதிவு செய்த படம் கோவில்பட்டி வீரலட்சுமி.
உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக திரையுலகிலிருந்து விலகி இருந்தார். கடந்த 5 வருடங்களுக்கு முன்பு பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட அவர் வீல் சேரில்தான் வாழ்கிறார்.
அவ்வப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அசோக்குமார் ஹைதராபாத்திலுள்ள தன் மகன் ஆகாஷ் அசோக்குமாரின் இல்லத்தில் ஓய்வெடுத்து வந்தார்.
இந்நிலையில் சென்னை, காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிசிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Comments
Post a Comment