3rd of June 2014
சென்னை:இசைஞானி இளையராஜாவின் 71வது பிறந்தநாள் விழா நேற்று அவர் எழுதிய இரண்டு புத்தகங்களை வெளியிடும் விழாவாகவும் அவரது ரசிகர்கள் இருக்கும் இடம்தோறும் அவரது ரசிகர்மன்றம் சார்பாக 71ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழாவாகவும் நேற்று காலை நடைபெற்றது.
குமுதம் சார்பிலும் இளையராஜா ஃபேன்ஸ் கிளப் சார்பிலும் இணைந்து நடத்தப்பட்ட இந்த விழாவில் இசைஞானியை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம், இசைஞானியின் இசையால் அறிமுகப்படுத்தப்பட்ட இயக்குனர்கள் பாலா, பார்த்திபன், எழுத்தாளர்கள் எஸ்.ராமகிருஷ்ணன், சுகா ஆகியோர் கலந்துகொண்டனர்.
பார்த்திபன் கவிதை நடையில், செய்யுள் உரையில் இசைஞானியை பாராட்டித்தள்ளினார். “இந்த மேடையில் இளையராஜாவுடன் நானும் அமர்ந்திருப்பதே பெருமை” என்ற பாலா வேகமாக எழுந்து சென்றவர் மிகப்பெரிய கேக்குடன் வந்தார்.. இசைஞானி இதெல்லாம் எதற்கு என இசைஞானி சங்கடத்துடன் மறுக்க, “நீங்க வெட்டுங்க.. நாங்க சாப்பிட்டுக்குறோம்” என கூற கேக்கை வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார் இசைஞானி.
எந்த விழாவிலும் சில வருடங்களாக கலந்துகொள்ளாத தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம், “இளையராஜாவின் பாடல்கள் இருக்கும் வரை அவரை அறிமுகப்படுத்தியவன் என்கிற வகையில் என் பெயரும் காலமெல்லாம் நிலைத்திருக்கும். நான் இத்தனை படங்களை தயாரித்ததை விட, கதை, வசனம் எழுதியதைவிட இதுதான் எனக்கு பெருமையாக இருக்கிறது” என நெகிழ்ந்தார்.
இசைஞானி எழுதிய இரண்டு புத்தகங்களில் ஒன்றை பஞ்சு அருணாசலம் வெளியிட பாலாவும், மற்றொன்றை எஸ்.ரா வெளியிட சுகாவும் பெற்றுக்கொண்டனர். தன்னை புத்தகம் எழுதத்தூண்டிய அனுபவங்களை பகிர்ந்துகொண்ட இசைஞானி அனைவருக்கும் நெகிழ்ச்சியுடன் தனது நன்றிகளை தெரிவித்துக்கொண்டார்.
Comments
Post a Comment