கடன் பிரச்னை: விஸ்வரூபம் 2. ஐ படங்கள் வெளிவருமா?!!!

27th of June 2014
சென்னை:ஒரு படம் பூஜைபோட்டு படப்பிடிப்பு முடிந்து வெளிவரும் வரை ஒரு தயாரிப்பாளரின் நிலையை எண்ணித்தான் பார்க்கவேண்டும். படம் எடுப்பது என்பது இன்று சாதாரண விசயம் கிடையாது. எவ்வளவு பெரிய பிரச்னைகளை சந்திக்கவேண்டியுள்ளது.படம் துவங்கும்போது ஒரு பட்ஜெட்டில் துவங்குவதும்,பின் முடியும்போது இரு மடங்கு பட்ஜெட்டில் செல்வதும் எத்தனை தயாரிப்பாளர்களின் விழியை பிதுங்கவைத்துள்ளது.
 
அதிலும் ஆஸ்கர் பிலிம்ஸ் என்றாலே பிரமாண்டத்துக்கு பெயர்போனதுதான். வானத்தைபோல,ரமணா,அந்நியன், வேலாயுதம் என பல வெற்றிப்படங்களை கொடுத்த நிறுவனம்.எத்தனை பிரமாண்டம் என்றாலும் தாங்கும்டா இந்த நிறுவனம் என்று கோடம்பாக்கத்தினரே பேசிய காலம் உண்டு. ஆனால் இன்று ஒரு படத்தை முடித்து வெளியிடுவதற்குள் பல பிரச்னைகளை சந்தித்துவருவதாக கூறப்படுகிறது.
 
அதற்கும் காரணம் கூறுகிறார்கள்…ஒரே நேரத்தில் பல படங்களை துவக்கியதுதான் என்று. அதுவும் அனைத்து படங்களும் மிகப்பெரிய பட்ஜெட் வேறு. ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிப்பில் கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2, ஜெயம்ரவி நடித்த பூலோகம், ஜெய் நடித்த திருமணம் என்னும் நிக்ஹா மற்றும் ஷங்கர் இயக்கத்தில் ஐ என வரிசைப்பட்டு கிடக்கின்றன. அதிலும் பூலோகம் படப்பிடிப்பு முடிந்தும் பல மாதங்களாக வெளியிடமுடியாமல் கிடக்கிறது.
 
தயாரிப்பாளரின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் விஸ்வரூபம் 2 படத்தை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டு உத்தமவில்லனுக்கு சென்றுவிட்டாராம் கமல்ஹாசன். ஐ நிலைமையோ அந்தோ பரிதாபம்தான். ஒருபக்கம் விக்ரம் மற்றும் எமிக்கு சம்பளபாக்கி உள்ளிட்ட பல பிரச்னைகள். பொருத்துபார்த்து ஒரு கட்டத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ஐ படத்தை விற்றுவிடலாமே என்று ரவியிடம் ஐடியாவும் கூறினாராம் ஷங்கர். அந்த அளவிற்கு அவர் பாதிக்கப்பட்டார். தன் பணத்தைகூட இப்படத்திற்காக ஷங்கர் செலவிட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.
 
இந்நிலையில் இந்த படங்களின் தயாரிப்புக்காக வங்கியில் 80 கோடி கடன் வாங்கியிருந்தாராம் ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன். தற்போது அந்த பணத்தை திருப்பி செலுத்திய பிறகே படங்களை வெளியிட வேண்டும் என்று வங்கி தரப்பில் தடை ஆணை வாங்கிவிட்டதாக கூறப்படுகிறது.  அப்படி ஆணை வாங்கியது உண்மை என்னும் பட்சத்தில் இனி பணத்தை கொடுத்தால் மட்டுமே ஐ,விஸ்வரூபம் 2 படங்களை ரசிகர்கள் ரசிக்கமுடியும்.
 
ஆனால் தற்போதைய நிலையில் அதற்கு வாய்ப்புகள் குறைவே என்கிறார்கள் கோடம்பாக்கத்தினர்.

Comments