தமிழ் சினிமாவில் அதிகரித்து வரும் ’2ம் பாகம்’!!!

13th of June 2014
சென்னை:தமிழ் சினிமாவில் வித்யாசமான முயற்சியில் ஒரு படம் வெற்றிப்பெற்றால் உடனே சொல்லிக் கொள்ளாமல் அது ட்ரெண்ட்டாக மாறிவிடும். சமீபத்தில் அப்படி தமில் சினிமாவை பிடித்து உலுக்கிக் கொண்டிருக்கும் ட்ரெண்ட், ‘சீக்குவல்’.
 
அதென்ன சீக்குவல்? ஒரு படத்துடைய முடிவின் தொடர்ச்சியைக் கொண்டு அதே கதாப்பாத்திரங்களுடன் வேறொரு படம் உருவானால் அது தான் சீக்குவல். அட நம்ம லாரன்சின் ‘முனி 2′ மாதிரியா என்றால், இல்லை. லாரன்சின் ‘முனி 2 – காஞ்சனா’ படம் ‘சீரிஸ்’ வகையை சேர்ந்தது.
அதென்ன ‘சீரிஸ்’? ஒரு படக் கதையின் கருவையோ, கதாப்பாத்திரங்களையோ வைத்துக் கொண்டு அதன் தொடர்ச்சியாக இல்லாமல் வேறொரு படம் எடுத்தால் அது ‘சீரிஸ்’ வகையை சேரும். அட நம்ம தல அஜித்தின் ‘பில்லா 2′ மாதிரியா என்றால், அதுவும் இல்லை. அஜித்தின் ‘பில்லா 2′ ‘ப்ரீக்குவல்’ வகையைச் சேர்ந்தது.
 
அதென்ன ‘ப்ரீக்குவல்’? ஒரு படக்கதையின் முந்தைய காலக்கட்டத்தையும் அதன் சம்பவங்களையும் கொண்டு அதே கதாப்பாத்திரங்களுடன் வேறொரு படம் எடுத்தால் அது ‘ப்ரீக்குவல்’. இதுவரை இந்திய சினிமாவில் அவ்வகையில் வெளிவந்த ஒரே படம் அஜித்தின் ‘பில்லா 2′ மட்டும் தான்.
 
பிள்ளையார் சுழி போட்டார் ‘கமல்‘!
ஹாலிவுட்டிலும் பாலிவுட்டிலும் பரவலாக பயன்படுத்தி வரும் இவ்வகையை தமிழ் சினிமாவில் அவ்வப்போது தான் கையாள்வார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவில் முதன் முதலாக வந்த சீக்குவல் படம் கமலின் ‘ஜப்பானில் கல்யாண ராமன்’(1985).
 
1979ல் வெளிவந்த ‘கல்யாண ராமன்’ படத்தின் தொடர்ச்சியாக வெளிவந்த இப்படம், ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு பின் தோல்வியைத் தழுவியது. அதன்பின் ‘குரோதம்’, ‘நான் அவன் இல்லை’, ‘அமைதிப்படை’ என அவ்வப்போது சீக்குவலில் சில படங்கள் வெளியானாலும் அவை எதுவும் சொல்லிக்கொள்ளும் வெற்றியைப் பெறவில்லை. இதனால், சீக்குவலில் படம் எடுத்தால் தமிழ் சினிமாவில் ஓடாது என்ற ஒரு சென்டிமென்ட் மெல்ல உருவானது.
 
சென்டிமென்ட்டை உடைத்தெறிந்த ‘சிங்கம் 2′!
பின்னர் இதை உடைத்தெரிக்கும் விதமாக வெளிவந்தது சூர்யாவின் ‘சிங்கம் 2′. தொடர் தோல்விகளால் துவண்டுப் போய் இருந்த சூர்யாவின் மார்கெட்டை நிலை நாட்டிய இப்படம், மேலும் தமிழ் சினிமாவில் சீக்குவலில் வெளிவந்த முதல் வெற்றிப் படமாக அமைந்தது. அதுவரை சீக்குவலில் படம் இயக்க தயங்கியவர்கள் எல்லாம் இதன் வெற்றிக்கு பின் படையெடுத்து கிளம்ப ஆரம்பித்தார்கள். இதன் மூலம் சூப்பர் ஸ்டாரின் ‘எந்திரன் 2′, ‘தல’ அஜித்தின் ‘மங்காத்தா 2′, விஜய்யின் ‘துப்பாக்கி 2′ ஆகிய படங்கள் வெளிவருமென்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அம்முயற்சிகள் அனைத்தும் ஆரம்ப நிலையிலே கைவிடப்பட்டது.
 
மீண்டும் கிளம்பும் ‘சீக்குவல்’ மோகம்!
 
இப்போது நீண்ட நாட்களுக்குப் பின் மீண்டும் பூதமாக கிளம்ப ஆரம்பித்துள்ளது ‘சீக்குவல்’ மோகம். இதன் விளைவாக நீண்ட நாட்களாக கூறி வந்த தனது ‘ஆயிரத்தில் ஒருவன்‘ படத்தின் 2ஆம் பாகத்தை தான் அடுத்த வருடம் எடுக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் இயக்குனர் செல்வராகவன்.
 
அதே போல் சமீபத்தில் வெளிவந்து வெற்றிப் பெற்ற சூப்பர் ஸ்டாரின் ‘கோச்சடையான்‘ படத்தின் இரண்டாம் பாக வேலைகள் விரைவில் தொடங்க இருப்பதாக அதன் இணை தயாரிப்பாளர் முரளி மனோகர் கூறியுள்ளார்.
இதன் தொடர்ச்சியாக கமல் ஹாசனின் ‘விஸ்வரூபம் 2‘ படத்தின் வேலைகளும் முடிவடைந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. 2013ல் வெளிவந்த இதன் முதல் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்னரே அதன் இரண்டாம் பாகத்தின் கதையை எழுதி முடித்திருந்தார் கமல். மேலே குறிப்பிட்டிருந்த இப்படங்களின் முடிவுகள் ஒவ்வொன்றும் அதன் இரண்டாம் பாகத்திற்கு வழிவிட்டு முடிக்கப்பட்டிருந்தது மேலும் குறிப்பிடத்தக்கது.
 
இதற்கிடையில் 2012ல் முனி சீரிஸில் சைலன்ட்டாக வெளிவந்த அதன் இரண்டாம் பாகமான ‘காஞ்சனா’, மாபெரும் வெற்றியைப் பெற அதன் தொடர்ச்சியாக தற்போது அர்ஜுனின் ‘ஜெய் ஹிந்த் 2′ மற்றும் சஞ்சய் ராமின் ‘தூத்துக்குடி 2′ ஆகிய படங்கள் அதே வகையில் தயாராகி வருகிறது. முந்தைய படங்களில் நடித்த அதே நடிகர்கள் அதன் தொடர்ச்சியில் நடித்திருந்தாலும் இதில் வெவ்வேறு கதாப்பாத்திரங்களில் தோன்ற இருக்கிறார்கள்.
 
ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த ‘சீக்குவல்’ மற்றும் ‘சீரிஸ்’ மோகம், எந்த அளவிற்கு அவர்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Comments