2014ம் ஆண்டில் ஆறு மாத காலத்திற்குள் சுமார் 100 தமிழ்ப் படங்கள் ரிலீஸ்!!!

28th of June 2014
சென்னை:2014ம் ஆண்டில் ஆறு மாத காலத்திற்குள் சுமார் 100 தமிழ்ப் படங்கள் வெளிவந்து புதிய சாதனை படைத்திருக்கிறது. கடந்த பத்து, பதினைந்து வருடங்களாகவே மொத்தமாக ஒரு ஆண்டிற்கு சுமார் 130 முதல் 150 படங்கள் வரைதான் வெளிவருவது வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால், இந்த அரை ஆண்டில் 100 படங்களைத் தொட்டிருப்பது ஆச்சரியமளிக்கும் ஒன்றாக விளங்குகிறது.
 
இந்த 100 படங்களில் எத்தனை படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்தன, எத்தனை படங்கள் 100 நாட்களைத் தொட்டன, எத்தனைப் படங்கள் ஒரு வாரம் ஓடின, எத்தனை படங்கள் ஒரே ஒரு நாள் ஓடின என்று பார்த்தால் அனைத்திற்குமே உதாரணம் சொல்லலாம்.
 
வினியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் கணக்குப் படி பார்த்தால் 'கோலி சோடா' படம் மட்டுமே அனைவருக்கும் லாபகரமான படமாக இருந்திருக்கிறது. விஜய் நடித்த 'ஜில்லா', அஜித் நடித்த 'வீரம்', ரஜினிகாந்த் நடித்த 'கோச்சடையான்' படங்கள் கூட சுமாரான லாபகரமான படங்கள் என்பதே உண்மை. சமீபத்தில் வெளிவந்த 'மஞ்சப் பை' படமும் லாபமாக அமைந்ததாகச் சொல்கிறார்கள். சில படங்கள் சுமாரான வெற்றியைப் பெற்றுள்ளன.
 
பல படங்கள் ஒரு வாரமும், சில படங்கள் ஒரே நாளும் மட்டுமே ஓடியிருக்கின்றன. எதிர்பார்த்து ஏமாந்த படங்கள் எத்தனையோ இருந்தாலும், நகைச்சுவை நடிகர்கள் நாயகனாக நடித்த படங்களும் சிரிக்கக் கூட வைக்காமல் சீரியசான படங்களாக அமைந்து ஏமாற்றத்தையே தந்தன.
 
இந்த ஆறு மாதத்திலேயே 100 படங்கள் என்றால் அடுத்த ஆறு மாதத்திலும் 100 படங்கள் வருவதற்கு வாய்ப்புள்ளதாகச் சொல்கிறார்கள். அடுத்து ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், விஷால், கார்த்தி, ஆர்யா, தனுஷ், ஜீவா இப்படி அனைத்து ஹீரோக்களின் படங்களும் வெளிவர உள்ளன. ஆக, இந்த ஆண்டைப் பொறுத்தவரை தமிழ் சினிமாவில் எண்ணிக்கையைப் பொறுத்தவரையில் எண்ணற்ற படங்கள் வந்தாலும் சாதனை புரியும் படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.

Comments