மலையாளத்தில், மோகன்லால், மீனா நடித்து வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற 'த்ரிஷ்யம்' ரீமேக்கில் கமல், கௌதமி!!!

26th of May 2014
சென்னை::
மலையாளத்தில், மோகன்லால், மீனா நடித்து வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற 'த்ரிஷ்யம்' படத்தின் ரீமேக்கில் கமல்ஹாசன், கௌதமி இணைந்து நடிக்க இருக்கிறார்கள். சில கோடிகளில் தயாரான 'த்ரிஷ்யம்' திரைப்படம் சுமார் 50 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை புரிந்த படம். சமீபகாலத்தில் மலையாளத் திரையுலகில் இப்படி ஒரு வசூலை எந்த படமும் குவித்ததில்லை.
 
முதலில், கமலுக்கு ஜோடியாக மலையாளத்தில் நடித்த மீனாவே நடிக்கப் போகிறார் என்றார்கள். அதன் பின் சிம்ரன் நடிப்பார் என்றார்கள். ஆனால், சிம்ரன் அதை உடனுக்குடன் மறுத்துவிட்டார். பின்னர், கெளதமி நடிக்கப் போகிறார் என்று செய்திகள் வந்தன. தற்போது, கௌதமி நடிப்பது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது என்றே தெரிகிறது. கணவன், மனைவியாக கமல்ஹாசனும், கௌதமியும் நடிக்கவிருப்பது படத்திற்குப் பொருத்தமாக இருக்கும் என்று சிலர் கருதுவதால் அப்படியே நடக்கும் என்கிறார்கள். கமல்ஹாசனும், கௌதமியும் இதற்கு முன் ஜோடி சேர்ந்து நடித்த 'அபூர்வ சகோதரர்கள், குருதிப்புனல், தேவர் மகன்' வெற்றிப் படங்களாகவும், தமிழ்த் திரையுலகில் முக்கியமான படங்களாகவும் அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 
மலையாளத்தில் 'த்ரிஷ்யம்' படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப்தான், தமிழ் ரீமேக்கையும் இயக்கப் போகிறார். 'த்ரிஷ்யம்' திரைப்படம் தெலுங்கில் வெங்கடேஷ், மீனா நடிக்க ஸ்ரீப்ரியா இயக்கத்தில் தயாராகி வருகிறது. படப்பிடிப்பு ஏறக்குறைய முடிவடையப்போகிறது.
கமல்ஹாசன் தற்போது 'உத்தம வில்லன்' படத்தில் பிஸியாக நடித்து வருவதால், அப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும், 'த்ரிஷ்யம்' தமிழில் தயாராக உள்ளது.
 
இருந்தாலும், கமல் நடிக்கும் படமாயிற்றே 'கடைசி நேர மாறுதலுக்குட்பட்டது', எதுவும் நடக்கும் என்று சொல்பவர்களும் உண்டு....

Comments