31st of May 2014
சென்னை::கடந்த 2012ல் மாறுபட்ட கதை அமைப்பில் எடுக்கப்பட்டு, நல்ல விமர்சனங்களும், பாராட்டுக்களும் பெற்ற மலையாளப் படம் ‘மஞ்சாடிக்குரு’. பிருத்விராஜும் பத்மபிரியாவும் நடித்த இந்தப்படத்தை இயக்கியவர் அஞ்சலி மேனன்.
குழந்தைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்த இந்தப்படத்தை தொடர்ந்து தற்போது அஞ்சலி மேனன் மலையாளத்தின் இளம் முன்னணி ஹீரோக்களான ஃபஹத் ஃபாசில், துல்கர் சல்மான், நிவின் பாலி ஆகியோரை நடிக்க வைத்து ‘பெங்களூரு டேய்ஸ்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இன்று இந்தப்படம் ரிலீஸாகியுள்ளது.
குறிப்பாக இந்தப்படம் கேரளாவை தாண்டி இந்தியாவின் பிற மாநிலங்களில் அதிக திரையரங்குகளில் வெளியாகும் படம் என்கிற சாதனையை செய்துள்ளது. கேரளாவில் 98 திரையரங்குகளில் வெளியாகியுள்ள இந்தப்படம் மற்ற மாநிலங்களில் அனைத்திலும் சேர்த்து 107 இடங்களில் வெளியாகியுள்ளது. சென்னையில் மட்டும் எட்டு திரையரங்குகளில் இந்தப்படம் வெளியாகியுள்ளது.
இந்தப்படத்தில் முக்கியமான கதாநாயகியாக நடிப்பவர் நஸ்ரியா. இதில் ஹீரோக்களான துல்கர் சல்மான், நிவின் பாலி ஆகியோருடன் இவர் நடிக்கும் மூன்றாவது படம் இது. ஆனால் தனது வருங்கால கணவர் ஃபஹத் ஃபாசிலுடன் இதுதான் முதல் படம்.. இந்தப்படத்தில் நடிக்கும்போது தான் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. இன்று இந்தப்படம் வெளியாவதில் மற்ற யாரையும் விட இந்த வருங்கால தம்பதிகள் தான் அதிக சந்தோஷத்தில் இருக்கிறார்களாம்.
நஸ்ரியா தவிர ‘மரியான்’ பார்வதி மேனன், நித்யா மேனன், இஷா தல்வார் என இன்னும் மூன்று ஹீரோயின்களும் உண்டு. நணபர்கள் அனைவரும் நஸ்ரியாவின் திருமணத்தை முன்னிட்டு ஒன்றுகூடுவதும் அதனை தொடர்ந்து நடைபெறும் நிகழ்வுகளுமாக இந்தப்படத்தை தனது முதல் படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட வகையில் பக்கா கமர்ஷியல் படமாக இயக்கி இருக்கிறாராம் அஞ்சலி மேனன்..
Comments
Post a Comment