கோச்சடையான் திரைப்பட விமர்சனம்!!!

24th of May 2014
சென்னை::கோச்சடையான் அனிமேஷன் படம் அல்ல, 'மோசன் காப்ட்சர் படம்' என்று மக்களுக்கு படத்தைப் பற்றி புறிய வைத்துவிட்டு தான் படத்தையே ஆரம்பிக்கிறார்கள். அனிமேஷன் படத்திற்கும் இப்படத்திற்கு வித்தியாசம் இருந்தாலும், மக்களுக்கு அது பெரிதாக புரியப்போவதில்லை. இருப்பினும், படம் ஆரம்பித்த அரை மணி நேரத்தில் இது அனிமேஷன் படம் என்பதையும் மறக்கச் செய்து ரசிகர்களை ரசிக்க வைக்கிறது படத்தின் கதையும், திரைக்கதையும்.

கோச்சடையான் என்ற தனது தந்தையின் மரணத்திற்கு காரணமானவர்களை தனது வீரத்தினாலும், தந்திரத்தினாலும் மகன் ராணா எப்படி பழிவாங்குகிறார் என்பதுதான் படத்தின் கதை.

கோட்டைபுரம் நாட்டு குடிமகனான ரஜினிகாந்த் சிறுவயதில் ரோமாபுரி நாட்டுக்கு ஓடி, அங்கே அனாதை சிறுவனாக வளர்ந்து, மன்னனின் போர் படையில் சேர்ந்து பயிற்சி பெறுகிறார். பிறகு தனது திறமையால் அந்நாட்டு தளபதியாகும் ரஜினிகாந்த், தனது தந்திரத்தினால், ரோமபுரியில் அடிமைப்பட்டு கிடக்கும் கோட்டைபுர நாட்டு வீரர்களை மீட்டு கோட்டைபுரம் நாட்டிற்கு திரும்புகிறார்.

கோட்டைபுர நாட்டு மன்னன் நாசரின் மகனான சரத்குமார், ரஜினியின் தங்கையான ருக்மணியை காதலிக்க, சரத்குமாரின் தங்கையான தீபிகா படுகோனே ரஜினியை காதலிக்கிறார். இந்த காதலை எதிர்த்தாலும், சூழ்நிலைக் காரணமாக சரத்குமார்-ருக்மணிக்கு நாசர் திருமணம் செய்து வைக்கிறார்.

இந்த நிலையில், தனது தந்தை கோச்சடையான் மீது வீன் பழி சுமத்தி மரண தண்டனை விதித்து, அவரை கொலை செய்த நாசரை கொலை செய்ய முயற்சிக்கும் போது ரஜினிகாந்த் படை வீரர்களால் பிடிபட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். அதே சமயம் ரஜினியின் செயலால் கோபம் கொண்ட ரோமபுரி நாட்டு மன்னர் ஜாக்கி ஷெராப்பும், அவருடைய மகன் ஆதியும் ரஜினியை பழி வாங்க வேண்டும் என்ற நோக்கில் கோட்டைப்புர நாட்டுக்கு படையெடுத்து வருகிறார்கள்.

சிறையில் இருக்கும் ரஜினிகாந்த் எப்படி மீண்டு வந்து தனது தந்தையைக் கொன்ற கோட்டைபுர மன்னன் நாசரை பழிவாங்கி, அதே சமயம் ரோமாபுரி படையை விரட்டியடிக்கிறார் என்பதுதான் க்ளைமாக்ஸ்.

படம் ஆரம்பித்தவுடன், படத்தில் தோன்றும் கதாபாத்திரங்கள் யார் யார் என்று, புரிந்துகொள்வதற்காகவே ரசிகர்கள் அரை மணி நேரம் யோசிக்கிறார்கள். பிறகு அனைத்து யோசனைகளை மூட்டைக்கட்டி போட்டு விடுகிறது ராணாவின் தந்திர செயல். அதிலும் கோச்சடையானின் பிளாஸ் பேக் ஆரம்பித்ததும், அனிமேஷன் படம் என்பதையும் மறக்கச்செய்து படம் ஜெட் வேகத்தில் நகர்கிறது.

ரஜினிகாந்துக்கே உரிய அதிரடி ஸ்டைல்கள் இந்த படத்தில் குறைவாக இருந்தாலும், அந்த அனிமேஷன் உரும்வ நம்மை பிரம்மிப்பில் ஆழ்த்துகிறது. அதிலும் கோச்சடையானின் அந்த சிக்ஸ் பேக் தோற்றமும், அவர் ஆடும் சிவதாண்டவமும், நடுக்கடலில் நடக்கும் சண்டைக்காட்சியும் சூட்நுணியில் அமைர வைக்கிறது.

ரஜினியின் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்ட விதத்தை எவ்வளவு பாராட்டுகிறோமோ, அதே அளவுக்கு நாசரின் கதாபாத்திர வடிவத்தையும் பாராட்ட வேண்டும். அனிமேஷன் கதாபாத்திரமாக இருந்தாலும், நடித்திருப்பது நாசர் தான் என்று 200 சதவீத நம்பிக்கையைக் கொடுக்கும் அளவிற்கு வில்லத்தனைக் காட்டியிருக்கிறது அந்த கதாபாத்திரம்.

ஜாக்கி ஷெராப், நாசர், ஆதி, ரஜினிகாந்த் ஆகியோரது உருவங்கள் மோசன் கேப்சர் மூலம் வடிவைக்கப்பட்ட விதம் நன்றாக இருந்தாலும், சரத்குமார், ருக்மணி, தீபிகா படுகோனே ஆகியோரது உருவாக்கத்தில் இன்னும் கொஞ்சம் முனைப்பு காட்டியிருக்கலாமோ என்று தோன்றுகிறது.

நாகேஷின் கதாபாத்திர உருவாக்கமும், அந்த வேடத்தின் நடிப்பும் நாசரை மீண்டும் பிறக்க வைத்திருக்கிறது.

என்ன தான் நம்ம ஹாலிவுட் அளவுக்கு யோசித்து படம் எடுத்தாலும், அந்த பாடல்களை வைத்து, "நாங்க கோடம்பாக்கத்து காரங்க" என்று நிரூபித்து விடுகிறார்கள். இருப்பினும், ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் பாடல்கள் கேட்கும்படியாகத் தான் இருக்கிறது. பின்னணி இசையின் மூலம் படத்தை ஒருபடி மேலே தூக்கி நிறுத்தும் ரஹ்மான், படத்தின் ஆரம்பத்தில் கதையை விவரிக்கும் தன்னுடைய குரலினாலும் நம்மை கவறுகிறார். வைரமுத்து மற்றும் வாலி ஆகியோரது பாடல் வரிகள் ஒவ்வொன்றும் கருத்துக்களை வாரி இறைக்கிறது.

அனிமேஷன் படமாக இருந்தாலும், அதை ரசிகர்களின் மனதில் இருந்து எடுப்பது, கே.எஸ்.ரவிகுமாரின் கதை, திரைக்கதை, வசனம் தான். எந்த இடத்திலையும் தொய்வு ஏற்படாத வகையில் திரைக்கதையை சுவாரஸ்யமாக அமைத்திருக்கும் ரவிகுமாரின், வசனங்களும், காட்சிகளும் ரசிக்க வைக்கிறது.

இந்திய திரையுலகில் முழுக்க முழுக்க அனிமேஷன் தொழில்நுட்பத்தைக் கொண்டு தயாராகும் படங்களுக்கு, இருந்த வரவேற்பு  இதுவரை எப்படியோ, கோச்சடையான் படத்திற்கு பிறகு அது அதிகரிக்கும் என்றே சொல்லலாம்.

கதாபாத்திரங்கள் வடிவமைப்பு, சில இடங்களில் அவைகளுடைய நடிப்பு என்று படத்தில் சிறு சிறு குறைகள் இருந்தாலும், இப்படத்தின் இயக்குநர் செளந்தர்யா ரஜினிகாந்த் அஸ்வின், தனது முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றுவிட்டார் என்றே சொல்ல வேண்டும்.

ரஜினி என்ற நட்சத்திரத்தையும், எந்த வித எதிர்ப்பார்ப்பும் இன்றி, இப்படத்தைப் பார்க்கும் ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தைக் கொடுக்கும் 'கோச்சடையான்', இந்திய திரையுலகத்தை வேறு பரிணாமத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறார் என்றால் அது மிகையாகாது...

Comments