கவிதாலயா தயாரிப்பில் பரத் நடிக்கும் கல கல நகைச்சுவைப்படம் ஐந்தாம் தலைமுறை!!!

19th of May 2014
சென்னை::கவிதாலயா தயாரிப்பில் பரத் நடிக்கும் கல கல நகைச்சுவைப்படம் ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி. இதில் பரத் பரம்பரை பரம்பரையாக சித்த வைத்திய தொழில் செய்யும் குடும்பத்தை சேர்ந்தவராக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நந்திதா கல்லூரி மாணவியாக நடிக்கிறார். இந்த  படத்தில்  பரத்துடன் 21 நகைச்சுவை நடிகர்கள் நடிக்கிறார்கள். இப்படத்தை இயக்குனர் எல்.ஜி.ரவிசந்தர் இயக்குகிறார்.
 
படம் குறித்து இயக்குனர் கூறியதாவது, ‘’அப்பாவி மருத்துவராக, படிப்பறிவு இல்லாதவராக, நண்பர்களோட அரட்டை அடிக்கிறவரானு அவரோட மேனரிசம் எல்லாத்தையும் மாத்தியிருக்கோம். காமெடி அவருக்கு ரொம்ப இயல்பா வருது. கதைப்படி அவர் சீரியசாக வந்தாலும் ஆடியன்சுக்கு காமெடியாதான் இருக்கும்.
 
இது டென்ஷன் உலகம், எதுக்கெடுத்தாலும் எரிஞ்சு விழற மனநிலைதான் பெரும்பாலானவங்களுக்கு. நம்ம வாழ்க்கை முறை அப்படி பழகி வச்சிருக்கு. பணம் தேடி ஓடுற வாழ்க்கை பிரஷரையும் ஏராளமான நோய்களையும் கொண்டு வந்து தந்திருக்கு. இதோட படம் பார்க்க வர்றவங்களை கூல் பண்ணி அனுப்பினா அதுவே பெரிய மருந்து தான். அப்படி நெனைச்சு உருவாக்கப்பட்ட படம்தான் இது. இரண்டரை மணி நேரம் விழுந்து சிரிச்சு, சிரிச்சு விழுந்துன்னு ரசிகர்களை ஜாலியா இருக்க வைக்கும்.
 
ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி”யா இருக்கிறவர் பரத். படிப்பறிவு இல்லாத அவரோட நண்பர்கள் அவரை ஏமாற்றி வாழறாங்க. ஒரு கட்டத்துல இது பரத்துக்கு தெரிய வருது. அதுல இருந்து தப்பிக்க படிச்ச ஒரு பெண்ணை மனைவியா ஆக்கணும்னு நினைக்கிறார். அது எப்படி நடக்குது அப்படிங்கறதுதான் கதை.
 
அட்டகத்தி நந்திதா கேரக்டர் பேர் நந்தினி. தம்பி ராமையாவோட செல்லப் பொண்ணு. பரத்துக்கு நந்திதாவை பார்த்ததும் காதல் பத்திக்குது. எம்.பி.பி.எஸ். டாக்டர்ன்னு பரத்தை நினைக்குறதும் அடுத்தாப்ல நடக்கிற காதல் விஷயங்களும் காமெடியா இருக்கும்.
 
இப்ப சித்த வைத்தியம்னா, ஆண்மை விருத்தி மருந்து…இல்லை….இல்லை… அப்படி சில வைத்திய சாலைகள் இருக்கு. அதை வச்சு தப்பா காமெடி ஏதும் பண்ணலை. சித்த வைத்திய மருத்துவத்துக்கு பெரிய மகத்துவம் இருக்கு. புனிதத்துவம் இருக்கு. அதை மீறாம சொல்லியிருக்கோம். இதுக்காக கொல்லிமலை, சேலம்னு அலைஞ்சு ரிசர்ச் பண்ணியிருக்கேன். என்ன மாதிரியான மூலிகையை பயன்படுத்துறாங்க. நோயாளிகளோட எப்படி பழகுறாங்க. சித்த வைத்தியத்துக்கு என்ன ட்ரீட்மென்டுக்காக அதிகம் வர்றாங்கன்னு நிறைய ஆராய்ச்சி பண்ணி, திரைக்கதை அமைச்சிருக்கேன். அதனால இயல்புக்கு மீறி எதுவும் இருக்காது. அதே மாதிரி வில்லங்கமான மேட்டரும் இதுல இருக்காது.
 
கன்னடத்துல டாப் காமெடியனா இருக்கிறவர் கோமல் குமார். கன்னட “சந்திரமுகி”யில் வடிவேலு கேரக்டர் பண்ணியவர் இவர்தான். புதுசா ஒருமுகம் தேவைப்பட்டது. அதனால அவரைக் கொண்டு வந்திருக்கோம். அவருக்கும் பரத்துக்குமான காமெடி கலக்கலா வந்திருக்கு. காமெடின்னு முடிவு பண்ணின பிறகு அதுக்கு ஏற்ற ஆட்களை புக் பண்ணினோம். தம்பி ராமையா, கருணாகரன், மனோபாலா, இமான் அண்ணாச்சி, மதன்பாப், சாம்ஸ் உட்பட 21 காமெடியன்கள் நடிக்கிறாங்க. ஒரு காமெடிக்கு சிரிச்சு முடிச்சா அடுத்த காமெடி வந்து முன்னால நிற்கும். பி.ஜி.முத்தையாவோட ஒளிப்பதிவு பளிச்சுன்னு இருக்கும். சைமன் இசை அமைச்சிருக்கார். ஒரு பாடலுக்காக நெதர்லாந்துக்கு போறோம் என்றார்.
 
செல்லமே’, ‘காதல்’,  ‘வெயில்’, ‘எம் மகன்’பரத், உள்ளிட்ட படங்களில் நல்ல பிள்ளையாக நடித்த பரத் பேரரசு இயக்கிய பழனி படத்தின் மூலம் ஆக்ஷனுக்கு மாறினார். அதன் விளைவு, அடுத்தடுத்து தொடர் தோல்வியை சந்தித்தார். எனவே அவர் தற்போது ஒரு பெரிய ஹிட்டுக்காக காத்திருக்கிறார்..

Comments