Mr. Bean Stills!!! மிஸ்டர் பீனின் புதிய காதலி!!!!!

19th of April 2014
சென்னை::மிஸ்டர் பீன் என்ற பெயரில் உலகப் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் ரோவன் அட்கின்ஸன் தன்னைவிட பாதி வயதான நடிகையொருவரை காதலிக்க ஆரம்பித்துள்ளதாக...

மிஸ்டர் பீன் என்ற பெயரில் உலகப் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் ரோவன் அட்கின்ஸன் தன்னைவிட பாதி வயதான நடிகையொருவரை காதலிக்க ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 
59 வயதான ரோவன் அட்கின்ஸன் பிரிட்டனைச் சேர்ந்தவர். மிஸ்டர் பீன் நகைச்சுவைத் தொடர்களில் வார்த்தைகளால் இல்லாமல் தனது வேடிக்கையான செய்கைகளால் சிரிக்க வைத்து புகழ் பெற்றவர் இவர். எந்த மொழி பேசுபவர்களுக்கும் புரியும்படியாக இருந்ததால் இவரின் நகைச்சுவை நாடகங்கள் உலகம் முழவதும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகின. இதனால் கோடிக்கணக்கான ரசிகர்களையும் பணத்தையும் ரோவன் அட்கின்ஸன் சம்பாதித்தார்.
 
மிஸ்டர் பீன் பாத்திரத்தில் கோமாளி போல் தோன்றினாலும் நிஜத்தில் மிக வித்தியாசமானவர் ரோவன் அட்கின்ஸன்.

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழத்தில் இலத்திரனியல் பொறியியல் துறையில் முதுமானி பட்டம் பெற்றவர் இவர்.  அங்கு படித்துக்கொண்டிருந்த காலத்தில்தான் மிஸ்டர் பீன் பாத்திரத்தை ரோவன் அட்கின்ஸன் உருவாக்கினார்.

1990 ஆம் ஆண்டு சுனேத்ரா சாஸ்திரி எனும் இந்துப் பெண்ணை அட்கின்ஸன் திருமணம் செய்தார். 1980களில் பிபிசியில் மேக் அப் கலைஞராக சுனேத்ரா பணியாற்றியபோது அவரும் அட்கின்ஸனும் முதல் தடவையாக சந்தித்தனர். இவர்களின் திருமணம் நடைபெற்ற 1990 ஆம் ஆண்டிலதான் மிஸ்டர் பீன் நகைச்சுவை நாடகங்கள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி சக்கை போடு போடத் தொடங்கின.
 
இத்தம்பதிக்கு ஒரு லிலி (20) எனும் மகளும் பெஞ்சமின் (19) எனும் மகனும் உள்ளனர். இவரின் மகள் லிலியும் ஒரு நடிகையாவார்.

23 வருடங்களாக இணைந்து வாழ்ந்த ரோவன் அட்கின்ஸனும் அவரின் மனைவி சுனேத்ராவும் பிரிந்துவிட்டதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக உத்தியோகபூர்வ அறிவிப்பு எதனையும் ரோவன் அட்கின்ஸன் விடுக்கவில்லை. ஆனால், லூஸி போர்ட் எனும் நடிகையொருவருடன் நடிகர் அட்கின்ஸன் அண்மையில் காணப்பட்டார்.   இவர்கள்  ஒருவரையொருவர் காதலிப்பதாகவும் பிரித்தானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

31 வயதான லூயிஸ் போர்ட் நகைச்சுவை நடிகையாவார். கடந்த வருடம் நாடகமொன்றில்  நடித்தபோது அவரும் ரோவன் அட்கின்ஸனும் முதல் தடவையாக சந்தித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

நடிகை லூஸி போர்ட்டைவிட நடிகர் ரோவன் அட்கின்ஸன் சுமார் இரு மடங்கு அதிக வயதானவர். ஆனாலும் இவர்களுக்கிடையில் காதல் மலர்ந்துவிட்டதாக கூறப்படுகிறது.

லண்டன் தென்பகுதியிலுள்ள நடிகை லூஸியின் வீட்டுக்கு அருகில் இவர்கள் பல தடவை பகிரங்கமாக காணப்பட்டமை இக்காதல் குறித்த ஊகங்களுக்கு வலு சேர்த்துள்ளன.

ஆனால், சுனேத்ராவுடனான திருமணத்தின்போது அணிந்த தனது திருமண மோதிரத்தை நடிகர் அட்கின்ஸன் இன்னும் கழற்றவில்லை. தனது திருமண வாழ்க்கை குறித்த கவனம் ஈர்க்கப்படுவதை தவிர்ப்பதற்காக அவர் மேற்படி மோதிரத்தை கழற்றாமல் இருக்கிறார் எனக் கூறப்படுகிறது.

புpரிட்டனின் மிக  செல்வந்த கலைஞர்களில் ஒருவராகத் திகழும் ரோவன் அட்கின்ஸனின் சொத்து மதிப்பு 7 கோடி ஸ்ரேலிங் பவுண்கள் (சுமார் 1525 கோடி இலங்கை ரூபா) என மதிப்பிடப்பட்டுள்ளது. மிஸ்டர் பீன் நாடகங்களில் பிரிட்டிஷ் லேலண்ட் மினி ரக காரொன்றுடன் அவர் தோன்றும் காட்சிகளும் மிக பிரசித்தமானவை. ஆனால், நிஜவாழ்வில் கார் பிரியரான ரோவன் அட்கின்ஸன், அதி நவீன ஆடம்பர கார்கள் பலவற்றை  வாங்கி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Comments