கோலிவுட் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த இன்னொரு நட்சத்திர பாடகி சிம்ரன்!!!

17th of April 2014
சென்னை::மும்பையில் இருந்து சென்னைக்கு வந்து கோலிவுட்டில் ஒரு மாபெரும் ரவுண்டு வந்தவர் சிம்ரன். கடைசியாக ஆஹா கல்யாணம் என்ற படத்தில் ஒரு கேரக்டரில் நடித்த அவர், தான் தயாரிப்பாளராகப் போவதாக சொல்லிக்கொண்டு தனது அபிமான ஹீரோக்கள் சிலரிடம் கால்சீட் கேட்டார். ஆனால், சிம்ரனை இழுத்து பிடித்து, இடுப்பை வளைத்து டூயட் பாடிய மேற்படி ஹீரோக்கள் யாருமே அவரை கண்டு கொள்ளவில்லை.
 
இதனால் தயாரிப்பாளராகப்போகிறேன் என்று மார்தட்டிய சிம்ரன் பின்னர் வேகம் குறைந்து போனார். இருப்பினும் கோடம்பாக்கத்தை அவர் காலி பண்ணவில்லை. இங்கிருந்தபடியே ஏதாவது சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று தொடர்ந்து முகாமிட்டுள்ள சிம்ரன், சில நாட்களுக்கு முன்பு பார்த்திபன் இயக்கி வரும் கதை திரைக்கதை வசனம் இயக்கம் என்ற படத்துக்காக பின்னணி பாடியுள்ளார்.
 
தனக்கு பாடுவதற்கு சான்ஸ் வேண்டும் என்று சிம்ரன் கேட்காதபோதும், படப்பிடிப்பு தளங்களில் ஓய்வாக இருக்கும்போது அவர் இந்தி பாடல்களை மெய்மறந்து பாடிக்கொண்டிருப்பதை பலமுறை கேட்டிருந்த பார்த்திபன், சிம்ரனின் பாட்டுக்கு ரசிகராகவும இருந்து வந்தாராம். அதனால்தான் தான் ரசித்த சிம்ரனின் இனிய குரலை தமிழக ரசிகர்களும் ரசித்து விட்டுப்போகட்டுமே என்று பெரிய மனது பண்ணி இப்போது சிம்ரனை பாடகியாக்கியிருக்கிறார்.
 
ஆக, சிம்ரனுக்குள் இருந்த இன்னொரு திறமையையும் பார்த்திபன் வெளிச்சத்துக்கு கொண்டு வந்து விட்டதால், அடுத்து பின்னணியிலும் ஒரு ரவுண்டு வரலாம் என்று சில இசையமைப்பாளர்களை துரத்தத் தொடங்கியிருக்கிறார் சிம்ரன். ஆக, ஸ்ருதிஹாசன், ஆண்ட்ரியா, ரம்யா நம்பீசனைத் தொடர்ந்து இன்னொரு நட்சத்திர பாடகியும் தமிழ் சினிமாவுக்கு கிடைத்து விட்டார்.

Comments